ஹெலிகாப்டர் உதயநிதி சொன்னாதால தான் வந்ததா..? வானதி சீனிவாசன்
மத்திய அரசின் மீது பழிபோடுவதையே வேலையாக மாநில அரசு செய்து கொண்டிருக்கிறது என பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பு
நேற்று செய்தியாளர்களை சந்தித்த கோவை தெற்கு பாஜகவின் சட்டமன்ற உறுப்பினரான வானதி ஸ்ரீனிவாசன், வெள்ள பாதிப்புக்கு பிறகு மாநில அரசு கேட்காமலேயே மத்திய அரசு நிபுணர் குழுவை அனுப்பியதாக கூறி, ஒவ்வொரு முறை மக்கள் பாதிப்புக்குள்ளாகும் போதெல்லாம், மத்திய அரசின் மீது பழிபோடுவதையே மாநில அரசு வேலையாக செய்து கொண்டிருக்கிறது என்று விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு பணம் தரவில்லை என்ற பிரச்னையை சொல்லும் மாநில அரசு, கூட்டணி பேச டெல்லிக்கு சென்றார்கள் என்று சுட்டிக்காட்டி, பண அரசியலை விட்டுவிட்டு மக்கள் துயரங்களுக்கு பதில் தர வேண்டும் என கூறினார்.
உதயநிதி சொல்லியா..?
மேலும், கடந்த 4 நாட்களாக உதயநிதி ஸ்டாலின் என்ன பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்று தெரிவித்து, மத்திய அரசுதான் ராணுவ ஹெலிகாப்டரை அனுப்பியது என்றும் மத்திய அரசு தமிழ்நாட்டின் பிரச்னைகளுக்கும் வேதனைகளுக்கும் உடனடி தீர்வை அளித்துள்ளது என்றார்.
திருமாவளவன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை பிரதமரை போல் செயல்படுவதாக விமர்சித்ததற்கு பதிலளித்த வானதி ஸ்ரீனிவாசன், தங்கள் கட்சியில்தான் குஜராத்திலே சாதாரண குடும்பத்தை சேர்ந்த, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆகி உள்ளார் என்று தெரிவித்து, அவர் கூட்டணி வைத்திருக்கும் திமுகவில் ஒரு பட்டியல் இனத்தை சேர்ந்தவரை முதலமைச்சராக்க ஒத்துக்கொள்ள முடியுமா? என்று வினவினார்.