மக்கள் அச்சத்துடன் - ரவுடிகள் தைரியமாக உள்ளனர் - திமுக ஆட்சியில்..!! வானதி ஸ்ரீனிவாசன்
ரவுடிகளிடம் மென்மையான அணுகுமுறையை கையாளுகிறது திமுக அரசு என வானதி ஸ்ரீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார்.
வானதி அறிக்கை
இது குறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த இரண்டரை ஆண்டுகளில் கள்ளச்சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அதன் விளைவாக கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் என சட்ட விரோதச் செயல்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன.
இதனால், சட்டம் - ஒழுங்கும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பரில், கடலூர் மாவட்டம், திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த சேவாக் என்ற 21 வயதான இளைஞர், கஞ்சா போதையில் பெற்ற தாயை அடித்து கொன்று வீட்டிலேயே புதைத்துள்ளார். நினைத்துக் கூட பார்க்க முடியாத கொடூரம் இது. கடந்த ஆகஸ்டில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கஞ்சா போதையில் வந்த 5 பேர் கும்பல், 50 வயதான கோபாலகிருஷ்ணன் என்பவரை அடித்து கொன்றுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், தாழவேடு பகுதியைச் சேர்ந்த புரட்சி பாரதம் கட்சியின் ஒன்றியச் செயலர் அசோக் என்பவரை, கஞ்சா போதையில் வந்த 3போ் கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது.
மக்கள் அச்சத்துடன்
இது ஒருசில உதாரணங்கள் மட்டுமே. இப்படி தமிழகத்தில் கொலை சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
அதை தடுத்து சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய திமுக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது. மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் திமுக அரசு, ரவுடிகளிடம் மென்மையான அணுகுமுறையை கையாண்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று ரவுடி ஒருவர் பட்டப்பகலில் ஓடஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரவுடிகளிடம் மென்மையான அணுகுமுறையை கையாளும் திமுக அரசு
— Vanathi Srinivasan (@VanathiBJP) December 27, 2023
திமுக ஆட்சியில் மக்கள் அச்சத்துடனும், ரவுடிகள் தைரியமாகவும் உள்ளனர்
ரவுடிகள், சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த இரண்டரை ஆண்டுகளில் கள்ளச்சாராயம், கஞ்சா… pic.twitter.com/s3zSKGudCz
முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின், அவரது மகன் அமைச்சர் திரு. உதயநிதியையும், திமுக அரசையும் விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிடுபவர்களை எல்லாம் தேடித்தேடி கைது செய்யும் திமுக அரசின் ரவுடிகளையும், சமூக விரோதிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அதனால்தான் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன.
மக்கள் பயமின்றியும், ரவுடிகள், சமூக விரோதிகள் அச்சத்துடனும் இருந்தால்தான் அங்கு நல்லாட்சி நடப்பதாக அர்த்தம். ஆனால், திமுக ஆட்சியில் மக்கள் அச்சத்துடன் இருக்கின்றனர். ரவுடிகள் தைரியமாக வலம் வருகின்றனர். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட ரவடிகள், சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.