தமிழ் எங்கள் உயிர் மூச்சு சொல்லும் முதல்வர் - ரஷ்ய சர்வாதிகாரியின் பெயரை ..வானதி அட்டாக்!
தமிழில் பெயர் வைக்காமல் ரஷ்ய சர்வாதிகாரியின் பெயரை வைத்துள்ள முதலமைச்சர், தமிழ் எங்கள் உயிர் மூச்சு எனக்கூறுவது வேடிக்கையாக இருப்பதாக வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர்
இது குறித்து அவர் வெலியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்.. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற சென்னை தொலைக்காட்சி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் நடந்த குளறுபடி சர்ச்சையாகி உள்ளதே? இது ஆளுநர் - முதலமைச்சர் மோதலாக மாறியுள்ளதே?
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற சென்னை தொலைக்காட்சி பொன் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் ஒரு வரி விடுப்பட்டதை வைத்து, திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தங்களின் பிரிவினை அரசியலை செய்து வருகின்றனர். சென்னை தொலைக்காட்சி பொன் விழாவில் ஆளுநர் ஒரு விருந்தினராக மட்டுமே பங்கேற்றார்.
அங்கு நடந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய குழுவினரின் கவனக்குறைவுக்கு ஆளுநர் எப்படி பொறுப்பாக முடியும்? கவனக்குறைவால் நேர்ந்த தவறுக்கு சென்னை தொலைக்காட்சி மன்னிப்பு கேட்டுள்ளது.
ஆனால், இதற்கு 'ஆளுநரா? ஆரியரா?' என கேள்வி எழுப்பி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் மீது இனவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இதற்கு ஆளுநர் வேதனையுடன் பதிலளிக்க, அதற்கு பதிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ் எங்கள் இனம்! அது எங்கள் உயிர்மூச்சு!
இந்த மண்ணின் தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான்!" என கூறியிருக்கிறார். தமிழில் பெயர் வைக்காமல் ரஷ்ய சர்வாதிகாரியின் பெயரை வைத்துள்ள முதலமைச்சர், தமிழ் எங்கள் உயிர் மூச்சு எனக்கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. மத்தியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது,
வானதி ஸ்ரீனிவாசன்
திருக்குறளை தேசிய நூலாக்க யார் தடையாக இருந்தார்கள்? என்தற்கு முதலமைச்சர் முதலில் பதில் சொல்ல வேண்டும். சிறுபான்மையினரின் வாக்குகள் மொத்தமாக கிடைக்கிறது என்பதற்காக, தீபாவளி, தைப்பூசம் போன்ற இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து கூட சொல்லாமல்,
இந்து மதத்தின் மீது வெறுப்பை உமிழும் முதலமைச்சர் ஸ்டாலின், வகுப்புவாதம், பிளவுவாதம் பற்றி பேசுவது, 'சாத்தான் வேதம் ஓதுவது போல' இருக்கிறது. ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் தாக்குப் பிடிக்கவில்லை. மழைநீர் வடிகால்வாய், கழிவுநீர் கால்வாய் அடைப்புகளை சரி செய்ய முடியவில்லை.
வட சென்னை பகுதியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லை. மிகவும் அத்தியாவசியமான வியாசர்பாடி கணேசபுரம் மேம்பாலப் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. சென்னை மாநகரிலேயே ஒரு பகுதியை புறக்கணிப்பவர்கள், மத்திய அரசு புறக்கணிக்கிறது எனது வெட்கமின்றி பேசுகிறார்கள். இனியாவது மொழி அரசியல்,
வெறுப்பு அரசியலை கைவிட்டு மக்கள் நலனுக்காக மட்டும் ஆட்சியை நடத்துங்கள். மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறுவதுபோல, இந்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லுங்கள். அனைத்து மதத்தினரையும் சமமாக மதியுங்கள்.
திராவிடம், திராவிட மாடல் என்று சொல்லி சொல்லி தமிழ், தமிழர்களின் அடையாளத்தை அழிக்காதீர். இது தகவல் தொழில்நுட்ப யுகம். வெறும் உணர்ச்சி அரசியல் நீண்ட காலம் நீடிக்காது. உண்மை தான் வெல்லும். இதை உணர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.