தேர்தல் விதிகளை மீறிய வானதி ஸ்ரீனிவாசன், அமைச்சர் பாண்டியராஜன் - தகுதிநீக்கம் செய்யப்படுவார்களா?
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் 3 மணி நிலவரப்படி 53% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திர கோளாறுகள், தேர்தல் விதிமீறல்கள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுவது வழக்கம்.
கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் இன்று வாக்களிக்க சென்றபோது தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட பேட்ஜ் அணிந்து வாக்குசாவடிக்குள் சென்றது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.

வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் தொலைவுக்கு கட்சி சின்னம் காட்டக்கூடாது என்பது தேர்தல் நடத்தை விதி. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி வானதி சீனிவாசன் தாமரை சின்னத்துடன் வாக்களித்துள்ளார்.
தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகளை மீறிய வானதி சீனிவாசனை தகுதிநீக்கம் செய்ய காங்கிரஸ் வேட்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதேபோல் சென்னை ஆவடி தொகுதியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் இரட்டை இலை அணிந்த துண்டுடன் வாக்களித்ததால் சர்ச்சை எழுந்தது.

தேர்தல் விதியை மீறி இரட்டை இலை சின்னத்துடன் வாக்களித்த மாஃபா பாண்டியராஜனை தகுதிநீக்கம் செய்ய திமுக வலியுறுத்தியுள்ளது.
ஏற்கனவே 2014ல் குஜராத்தில் வாக்களித்துவிட்டு தாமரை சின்னத்தை காட்டிய மோடி மீது வழக்கு பதியப்பட்டது குறிப்பிடத்தக்கது.