நான் என்ன 'துக்கடா அரசியல்வாதியா'? கமலின் ட்வீட்டிற்கு கொந்தளித்த வானதி சீனிவாசன்!
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக வானதி சீனிவாசன் களம் இறங்கியிருக்கிறார். சமீபத்தில் வானதியை ஆதரித்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்த தொகுதியை பற்றி கமலுக்கு என்ன தெரியும்? இங்கு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து வானதி சீனிவாசனுடன் கமல் விவாதம் செய்யத் தயாரா? என்று கேள்வி கேட்டிருந்தார்.
இதற்கு பதில் கொடுக்கும் விதமாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கையில், வானதி சீனிவாசனுடன் விவாதிக்க அழைக்கிறார் பா.ஜ.க மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி. முதலில் மோடி மற்றும் அமைச்சர்களுடன் விவாதத்திற்கு ஏற்பாடு செய்யட்டும். பிறகு வானதி சீனிவாசன் போன்ற துக்கடா தலைவர்களுடன் விவாதிக்கலாம் என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தது.
இதனையடுத்து, வானதி சீனிவாசன், “முதலில் கமல் ஆரோக்கியமான அரசியல் விவாதத்தை என்னுடன் நடத்த வேண்டும். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி சொன்னதற்கு, என்னை துக்கடா வானதி என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்திருக்கிறது. நான் கோவையில் பிறந்து, அரசாங்க பள்ளியில் படித்து, வழக்கறிஞர் தொழில் செய்திருக்கிறேன்.
"துக்கடா வானதி"???
— Vanathi Srinivasan (@VanathiBJP) March 29, 2021
மக்கள் நீதி மையத்தின் அனாகரிகமான விமர்சனம்!@ikamalhaasan @drmahendran_r#Vanathi4KovaiSouth #KovaiSouth #CoimbatoreSouth pic.twitter.com/VDEP1rQT5A
எனக்கும் குடும்பம் இருக்கிறது, குழந்தைகள் இருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக இந்த தொகுதியில் மக்களுக்கு என்ன செய்திருக்கிறேன் என்று என் சமூக வலைதளப் பக்கங்களில் பார்த்தால் தெரியும். என்னை பார்த்து துக்கடா அரசியல்வாதி என்று சொல்கிறார்கள் என்றால் பெண்களுக்கு இவர்கள் கொடுக்கும் மரியாதை இதுதானா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.