கமலை எதிர்த்து வானதி சீனிவாசன்? ஆயிரம் விளக்கில் குஷ்பு? : இன்று வெளியாகும் வேட்பாளர் பட்டியல்
பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனை எதிர்த்து போட்டியிடுவார் என கூறப்படுகிறது. இந்த முறை அதிமுக கூட்டணியில் உள்ள பாஜகவுக்கு 20 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பாஜக இன்னும் வேட்பாளர் பட்டியல் வெளியாகவில்லை.
நேற்று 5 மாநில வேட்பாளர்களை இறுதி செய்யும் பாஜகவின் மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசனை எதிர்த்து போட்டியிடுவார் எனவும் நடிகை குஷ்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லாவற்ரையும்கட்சி அறிவிக்கும் முன்பே வேட்பு மனு தாக்கல் செய்த நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவார் என்றும் தகவல்கள் உலா வருகின்றன. தமிழக பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.