“தமிழக முதலமைச்சரின் துபாய் பயணம் பெருமைக்குரியது” - வானதி சீனிவாசன் பேட்டி
புதுச்சேரியில் பா.ஜ., மகளிர் தேசிய நிர்வாகிகள் கூட்டம் மற்றும் ஊர்வலத்தில் பா.ஜ., தேசிய மகளிரணி தலைவியான, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பங்கேற்றார்.
இந்தியா முழுவதும் உள்ள பாஜக வின் முக்கிய மகளிரணி நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டமானது புதுச்சேரியில் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் மகளிருக்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள திட்டங்கள், அதனால் ஏற்பட்டுள்ள பலன்கள் குறித்து பேசப்படவுள்ளது.
பத்திரிக்கையாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன், தென் இந்தியாவில் கர்நாடகத்திற்கு பிறகு புதுச்சேரியில் பா.ஜ.க ஆட்சியை பிடித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது என்றார்.
மேலும், தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா என பல மாநிலங்களிலும் பாரதிய ஜனதா ஆட்சி நிச்சயமாக வரத்தான் போகிறது.
20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டசபைக்குள் நுழைந்த பாஜகவின் எண்ணிக்கை இனி கூடுதலாகும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் துபாய் பயணம் குறித்து அவர் பேசியபோது,
"தமிழக முதல்வர் தமிழகத்தின் பெருமைகளை வெளி நாடுகளுக்கு எடுத்து செல்வது தமிழகத்திற்கு பெருமை தான்.

ஒட்டு மொத்த இந்தியா முன்னேற வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்கள் செயல்படவேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.
ஒட்டு மொத்த இந்தியாவிற்காகதான் பிரதமர் மோடி சிந்தித்து செயல்படுகிறார் என தெரிவித்துள்ளார்.
மேலும், எப்போது வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம், தேசிய ஒற்றுமைக்கு எதிராக பேசுவதையும், செயல்படுவதையும் தி.மு.க.,வினர் குறிக்கோளாக வைத்துள்ளனர்.
அவர்களின் இந்த எண்ண ஓட்டம் தான் எங்களுக்கு வேதனையாக உள்ளது" இவ்வாறு அவர் கூறினார்.