மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்த வானதி சீனிவாசன்
கோவை இராமநாதபுரம் பகுதியில் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்த பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் பொதுமக்களிடத்தில் வாக்குகளை சேகரித்தார். கோவை மாவட்டம் ராமநாதபுரம், ஓலம்பஸ், 80 அடி சாலை பகுதியில் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்த பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி சீனிவாசன், அந்த பகுதியில் உள்ள அனைத்து பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மேலும் அந்த பகுதி மக்களிடம் வாக்கு சேகரித்து, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்ட வானதி சீனிவாசன் கூறுகையில், தமிழர்களின் வீர கலைகளை மீட்டெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழர்களின் பழமையான கலைகள் எல்லாம், தற்போது கற்று கொடுக்க யாரும் இல்லாத நிலையில், அதனை கற்கவும் யாரும் முன் வருவதில்லை, அப்படி, அழிந்து வரும் நிலையில் உள்ள கலைகளை எல்லாம் இளம் தலைமுறையினருக்கு கற்றுக் கொடுத்து மீண்டும் அந்த கலைகளை புத்துயிர் பெறுவதற்கான அனைத்து வழிகளையும் பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டு வருகின்றது.
இனி வருகினற காலங்களிலும் மேற்கொள்ளும் எனவும், அந்த வகையில் அழிந்துவரும் இனமான, நாட்டு காளை மாடுகளை பராமரித்து, அதனை பாதுகாப்பு செய்து தமிழர்களின் வீர பெருமைகளை உலக நாடுகளின் முன்னில் பறைசாற்றும் விதமாக இனிவரும் காலங்களில் பாரதிய ஜனதா ஈடுபட போகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தெற்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் போட்டியிடுகின்ற தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கேட்டு கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்த வேட்பாளருக்கு பலரும் ஆர்த்தி எடுத்து தங்களது ஆதரவை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.