நடிகர் அஜித்தின் வலிமை அப்டேட் கொடுத்த இசையமைப்பாளர் - அஜித் ரசிகர்கள் குஷி!
தமிழகம் மற்றுமின்றி பல்வேறு நாடுகளில் வலிமை அப்டேட் கேட்டுக்கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு இசையமைப்பாளர் அப்டேட் கொடுத்து மகிழ்ச்சியளித்துள்ளார்.
நடிகர் அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நேர்கொண்ட திரைப்படம் வெளியான நிலையில், இதனைத் தொடர்ந்து மீண்டும் அஜித்-வினோத் ஒன்றாக இணைந்து வலிமை திரைப்படம் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியானது.

ஏறத்தாழ நான்கு மாத தாமதத்திற்கு பின் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கினாலும் பல்வேறு காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடர்ந்து பாதித்த வண்ணம் இருந்து வந்தன.
தொடர்ந்து கொரோனா ஊரடங்கு காரணமாக திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடங்கியதால் அஜித் ரசிகர்கள் முதலமைச்சர், அரசியர் பிரமுகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என வீதி வீதியாக வலிமை அப்டேட் கேட்டு அனைவரையும் கதறவிட ஆரம்பித்தனர்.
இதனை தொடர்ந்து ரசிகர்களுக்காக அறிக்கை வெளியிட்ட நடிகர் அஜித், சரியான நேரத்தில் அப்டேட்டை தர உள்ளதாக தெரிவித்தார்.

இதையடுத்து, அஜித் பிறந்த நாள் அன்று அப்டேட் கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த நிலையில், இரண்டாம் அலை காரணமாக அதுவும் ஏமாற்றத்தையே அளித்தது.
இதன் தொடர்ச்சியாக தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மைதானம் வரை சென்ற அஜித் ரசிகர்கள், இங்கிலாந்து நாட்டில் வலிமை அப்டேட் வேண்டி பதாகை ஏந்தினர்.
மேலும் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த கிரிக்கெட் வீரர் அஸ்வினிடமும் வலிமை அப்டேட் என கேட்டு அலற விட்டனர்.

இந்த நிலையில், தற்போது வலிமை திரைப்படத்தில் தாயை போற்றும் ஒரு பாடல் சிறப்பாக உருவாகியுள்ளதாகவும், படத்தின் துவக்க பாடல் சிறப்பாக வந்துள்ளதாகவும் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.