புகழ்பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை
பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரன் கோயிலில் நாளை கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.
பக்தர்கள் கூடுவதை தடுக்க வைத்தீஸ்வரன் கோயிலில் 144 தடை அமல்படுத்தப் படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலில் செவ்வாய்க்கு உரிய ஸ்தலமான வைத்தியநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
தற்போது கொரோனா பரவல் காரணமாகவும், நீதிமன்ற உத்தரவுபடியும், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படியும் விழா நடைபெற உள்ளதால் இதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை 29 தேதி காலை 4 மணி முதல் 10 மணி வரை வைத்தீஸ்வரன் கோயிலில் 144 தடை அமல்படுத்தப் படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார் .
மேலும் சீர்காழியிலிருந்து வைத்தீஸ்வரன்கோவில் வழியாக மயிலாடுதுறை செல்லும் அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டு மாற்றாக பூம்புகார் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது,
மேலும் வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு டாஸ்மாக் கடைகள் இன்று 28 இரவு முதல் நாளை 29 இரவு வரை மூடவும் உத்தரவு போடப்பட்டுள்ளது.