வாய்தா பட நடிகை தற்கொலை: இறப்பதற்கு முன் எழுதிய கடிதம் சிக்கியது
வாய்தா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்த பவுலின் ஜெசிகா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
துணை நடிகை மரணம்
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்துக்கு உட்பட்ட சத்தியவேடு இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் தீபா என்ற பவுலின்ஜெசிகா (29). இவர், சென்னை விருகம்பாக்கம், மல்லிகை அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்துக் கொண்டு சினிமாவில் நடித்து வந்தார்.
வாய்தா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். திரைக்கு வரும்முன் டிக்-டாக்கில் பிரபலமாக இருந்தார். திரைத் துறையைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த சிராஜுதீன் என்ற நண்பரை நேற்று முன்தினம் போனில் அழைத்து , எனக்கு வாழப் பிடிக்கவில்லை. எனவே, தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன் என அழுதபடி கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
தாழிடப்பட்ட கதவு
அதிர்ச்சி அடைந்த அவர், பவுலின் ஜெசிகா வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் அருகே வசிக்கும் நண்பர் பிரபாகரன் என்பவரிடம் இதுகுறித்து தெரிவித்து, நேரில் சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். அந்த நபர் அங்கு சென்று பார்த்தபோது, வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டு, நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது.
இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கோயம்பேடு போலீஸார் அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பவுலின் ஜெசிகா தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து, போலீஸார் அவரது உடலை மீட்டு கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சிக்கிய கடிதம்
ப்பவுலின் ஜெசிகா அறையைச் சோதனை செய்தபோது, அங்கு அவர் எழுதி வைத்திருந்ததாகக் கூறப்படும் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், “நான் ஒருவரைக் காதலித்தேன். ஆனால், அவர் எனது காதலை ஏற்றுக்கொள்ளவில்லை.
எனக்கு யாரும் ஆதரவாக இல்லை. இதனால், இந்த உலகில் வாழ விரும்பவில்லை என்று பவுலின் ஜெசிகா கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், போதிய பட வாய்ப்பும் கிடைக்கவில்லை என்றும் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.
முதல் கட்டமாக பவுலின் ஜெசிகாவின் செல்போனை பறிமுதல் செய்து அதில் அவர் கடைசியாக யார்? யாரிடம் பேசினார் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பவுலின் ஜெசிகா மரணம் குறித்து ஆந்திராவில் உள்ள அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் சென்னை வந்துள்ளனர்.