அவரது தோல்வியை எதிரிகள்கூட ரசிக்கவில்லை- மு. க ஸ்டாலின் குறித்து வைரமுத்து பதிவு

M K Stalin Vairamuthu
By Yashini May 15, 2026 09:49 AM GMT
Report

முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை கவிஞர் வைரமுத்து நேற்று சந்தித்தார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 

வெளியிட்ட பதிவு..,

மே 4ஆம் நாள் சந்திப்புக்குப் பிறகு தளபதி மு.க.ஸ்டாலினை நேற்றுதான் பார்த்தேன். உதயநிதி சபரீசன் உடனிருந்தார்கள்.

இன்றைய மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் உங்கள் பேச்சு தப்பிப்பு (Escapism) இல்லாத தலைமைப் பண்பைக் காட்டியது என்றேன்.

அவர் முகத்திலும் உடல்மொழியிலும் தோல்வியின் எந்தச்சாயலும் இல்லை. இன்னும் பல்லாண்டுகள் உழைப்பதற்கான ஊட்டமும் ஊக்கமும் இருப்பதாகவே தோற்றம் தருகிறார். அவரது தோல்வியை எதிரிகள்கூட ரசிக்கவில்லை.

இரவு என்பது இன்னொரு பகலைத் தயாரிக்கிறது. தோல்வி என்பது இன்னொரு வெற்றியைத் தயாரிக்கிறது.  

பேரறிஞர் அண்ணாவுக்கும் தளபதி மு.க.ஸ்டாலினுக்கும் வரலாறு ஓர் ஒற்றுமையை வார்த்திருக்கிறது. 1962 தேர்தலில் 50 சட்டமன்ற உறுப்பினர்களைத் தி.மு.க வென்றெடுக்கிறது; ஆனால், அண்ணா தோற்றுப்போகிறார். தான்மட்டும் சட்டமன்றம் செல்லாமல் தம்பிமார்களை அனுப்பிவைக்கிறார். 

அப்போது அண்ணா சொன்னார், "ஐரோப்பாவில் இஸ்லாமியர்க்கும் கிறித்துவர்க்கும் போர் மூண்டது. ஏசு பிறந்த ஜெருசலம் நகரில் கிறித்துவர்கள் நுழையக்கூடாது என்று இஸ்லாமியர்கள் தடைவிதித்தார்கள்.

இஸ்லாமியர்களுக்குத் தலைமை தாங்கியவன் சாலடி என்னும் மன்னன்.கிறித்துவர்களுக்குத் தலைமை தாங்கியவன் ரிச்சர்ட்.  

இறுதியில் ஒரே ஒரு நிபந்தனையோடு போர்நிறுத்த ஒப்பந்தம் எற்பட்டது: "எல்லாக் கிறித்துவர்களும் ஜெருசலத்துக்குள் வரலாம்; கிறித்துவர்களின் தலைவனான ரிச்சர்ட் தவிர".

அதைப் போலத்தான் அண்ணா வெளியே நின்றார், தம்பிமார்கள் சட்டமன்றம் சென்றார்கள்.

2026ஆம் ஆண்டிலும் வரலாறு வட்டமடிக்கிறது. தளபதி வெளியே நிற்கிறார்; தளகர்த்தர்கள் சட்டமன்றம் செல்கிறார்கள். அண்ணா மீண்டு வந்தார்; ஸ்டாலினும் என தெரிவித்தார்.