"அம்பேத்கருக்கு இன்று இன்னுமொரு பிறந்தநாள்” - நரிக்குறவர் வீட்டில் முதலமைச்சர் உணவு உண்டதை குறித்து வைரமுத்து ட்வீட்
அம்பேத்கருக்கு இன்று இன்னுமொரு பிறந்தநாள் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் இன்று 223 நரிக்குறவர் மக்களுக்கு வீட்டுமனை பட்டா, முதலமைச்சரின் விரிவான காப்பீடு அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து ஆவடி நரிக்குறவர் மக்களுக்கும், திருமுல்லைவாயில், ஜெயா நகர் பகுதியில் உள்ள நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதி மக்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார். அவருடன் பொதுமக்கள் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
ஸ்டாலின் தான் வர்ராறு என ஒரு சிறுவன் பாட அதனை கேட்டு மகிழ்ந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நரிக்குறவர் மக்கள் அணிவித்த ஊசி, பாசி மணிகளை கழுத்தில் அணிந்துகொண்டார்.
அதனைத் தொடர்ந்து அங்குள்ள ஒரு வீட்டிற்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு அவர்கள் வழங்கிய இட்லி, மெதுவடை, நாட்டுக் கோழி குழம்பை மகிழ்ச்சியுடன் சாப்பிட்டார். அருகில் நின்றிருந்த மாணவிக்கும் இட்லியை ஊட்டிவிட்டார்.பின்னர் அவர் சாப்பாடு காரமாக இருந்ததாக கூறினார்.
முன்னதாக நரிக்குறவர் மக்களிடம் செல்போனில் வீடியோ கால் மூலம் உரையாடிய பொழுது நேரில் வந்தா சோறு போடுவிங்களா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டார்.அவரிடம், நீங்கள் வந்தால் விருந்தே வைப்போம் என மாணவி திவ்யா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள கவிஞர் வைரமுத்து, “முதலமைச்சர் வந்தால் கறிச்சோறு போடுவோம் என்றார்கள்; கறிச்சோறு போட்டு நாங்கள் வாக்கு தவறாதவர்கள் என்று மெய்ப்பித்துவிட்டார்கள் நரிக்குறவர் இனத்து நல்ல மக்கள்.
அதை சாப்பிட்டு நான் நாக்குத் தவறாதவன் என்று மெய்ப்பித்துவிட்டார் முதலமைச்சர்; அம்பேத்கருக்கு இன்று இன்னுமொரு பிறந்தநாள்” என்று குறிப்பிட்டுள்ளார்.