திமுகவுடன் தொகுதி பங்கீடு - அதிரடி அறிவிப்பை வெளியிட்ட வைகோ..!
இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக தலைவர் வைகோ, இந்தியா கூட்டணி, மக்கள் சக்தியைத் திரட்டி நரேந்திர மோடி அரசை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.
வைகோ பேட்டி
புத்தாண்டு தினமான இன்று சென்னை எழும்பூரில் மதிமுக தலைவர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திராவிட மாடல் ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது என பாராட்டினார்.
சுதந்திர இந்தியாவில் நெருக்கடி நிலையைவிட மோசமான சட்டங்களை பாஜக அரசு கொண்டுவந்திருக்கிறது என்று விமர்சித்து எதிர்க்கட்சிகள் உருவாக்கியிருக்கும் இந்தியா கூட்டணி, மக்கள் சக்தியைத் திரட்டி நரேந்திர மோடி அரசை ஆட்சி பீடத்திலிருந்து அகற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் வெற்றிகரமாக நடைபெறுகிறது என்றும் இந்தியாவுக்கே வழிக்காட்டக்கூடிய இடத்தில் ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது என புகழாரம் சூட்டிய வைகோ, மு.க.ஸ்டாலின் சந்திப்புக்கு பின்னராவது ஆளுநர் தன் கடமையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.
கூட்டணி பேச்சுவார்த்தை
தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து, புயல் மழை பாதிப்புகளை சீரமைக்க தமிழ்நாடு அரசு கோரிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு ஓர வஞ்சனை செய்கிறது என குற்றம்சாட்டி கோயிலையும் இந்து மதத்தையும் காட்டி தமிழ்நாட்டில் பாஜகவால் ஓட்டு வாங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், நாடாளுமன்ற தொகுதி பங்கீடு குறித்து கூட்டணி கட்சியுடன் பொங்கலுக்கு பிறகு பேசப்படும் என தெரிவித்தார்.