நான் உயிரோடு இருக்கும் வரை விடமாட்டேன் - வைகோ ஆவேசம்
விஜய்யின் புதிய அரசியல் கட்சியால் திமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை என வைகோ தெரிவித்துள்ளார்.
வைகோ
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "முதல்வர் ஸ்டாலின் பெண்கள், விவசாயிகள், மாணவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்காக புதிய புதிய திட்டங்களை கொண்டு வருகிறார். பிற மாநில முதல்வர்களுக்கு எடுத்துக்காட்டாக நம்முடைய முதலமைச்சர் இருக்கிறார்.
விஜய்
தமிழ்நாட்டில் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதே போல் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி உறுதியாக வெற்றி பெறும். திமுக கூட்டணி வலுவாக இருக்கிறது. விஜய்யின் புதிய அரசியல் கட்சியால் திமுக கூட்டணிக்கு எந்த பாதிப்பும் இல்லை.
வரும் காலத்தில் பிரதமர் மோடிக்கு 250 இடங்கள் கூட கிடைக்காது. தமிழகத்தை பாஜக குறிவைத்து தாக்குகிறது. பாஜக கூட்டணி என்று பெயர்தான் உள்ளது. ஆனால் மோடி கூட்டணி கூட்டத்தை இதுவரை கூட்டவே இல்லை. வாஜ்பாய் மாதம் ஒரு முறை கூட்டணி கட்சிகளின் கூட்டத்தை கூட்டுவார்.
அண்ணாமலை
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மோசமான திட்டத்தை பிரதமர் மோடி செயல்படுத்த நினைக்கிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறையில் சாத்தியமற்றது. இத்திட்டத்தால் குழப்பம் தான் ஏற்படும். ரஷ்யா, அமெரிக்காவைப் போல தான் அதிபராக வேண்டும் என்று மோடி விரும்புகிறார்" என பேசினார்.
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் வரை செருப்பு அணியப் போவதில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியது குறித்த கேள்விக்கு, "நான் உயிரோடு இருக்கும் வரை திமுக ஆட்சியை கவிழ்க்க விடமாட்டேன். அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் ரசிக்கும்படியாக இருந்தது என பதிலளித்தார்.