எந்த இயக்கத்திற்கு உழைத்தேனோ அவர்களே என்னை நீக்கி விட்டனர் - வைகோ வேதனை
எந்த இயக்கத்தை நேசித்தேனோ, அந்த இயக்கமே என்னைக் கட்சியிலிருந்து வெளியேற்றியது என வைகோ பேசியுள்ளார்.
வைகோ
சென்னை எழும்பூரில் மதிமுக சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய வைகோ, "நான் ஈழத்திற்கு புறப்படும் முன், என் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு புதிய ஆடைகள் எடுத்து கொடுத்தேன். ஏன் இந்த திடீர் அன்பளிப்பு என என் மனைவி கேட்டபோது, 'தி.மு.க வெற்றி பெற்றதை கொண்டாட வாங்கிக் கொடுத்தேன்' என கூறினேன்.
கட்சியிலிருந்து நீக்கம்
யாருக்கும் தெரியாமல் நான் ஈழத்திற்கு செல்லும் முன், கருணாநிதிக்கு 6 பக்கம் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டுச் சென்றேன். ரகசியமாக நான் ஈழம் சென்ற செய்தி, தமிழ்நாடு முழுவதும் பரவியது. உடனே 'வைகோ ஈழத்திற்கு சென்றதற்கும் தி.மு.க-விற்கு எந்த சம்மதமும் இல்லை' என அறிக்கை வெளியிட்டனர்.
எந்த இயக்கத்திற்கா உழைத்தேனோ, எந்த இயக்கத்தை நேசித்தேனோ, அந்த இயக்கமே என்னைக் கட்சியிலிருந்து வெளியேற்றியது. 30 ஆண்டு காலமாக திமுகவில் பயணித்தபோது 27 முறை சிறை சென்றேன். திமுகவின் தலைவருக்கு உயிருக்கு உயிரான, மெய்காப்பாளராக இருந்திருக்கிறேன். ஆனாலும், கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டேன்.
அதானிக்கு 6000 கோடி கடன் வாங்கி கொடுத்த மோடிதான் முதல் குற்றவாளி. ஆனால் அவரை கேள்வி கேட்காமல் ஏன் தமிழகத்தின் முதல்வரை நோக்கி கேள்வி கேட்கின்றனர். மோடி நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களையும் பிடித்து விட்டு இப்போது தமிழகத்தை பிடிக்க நினைக்கிறார். அதனால்தான் திமுகவோடு பயணிக்கிறோம், திமுக ஒரு திராவிட இயக்கம் அதனை அழிக்க விடக்கூடாது" என பேசினார்.