ஏழு தமிழர்களை விடுதலை செய்க - முதல்வர் ஸ்டாலினிடம் வைகோ வலியுறுத்தல்

DMK Stalin Vaiko Ezhuvar
By mohanelango May 10, 2021 09:50 AM GMT
Report

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் எழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தவறு செய்யாமலே ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகின்ற ஏழு பேரில், சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரும் மரண தண்டனை கைதிகளாகவே மனதளவில் சித்ரவதை அனுபவித்து வருகின்றனர்.

அதுபோலவே நளினி, ரவிச்சந்தின், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரின் இளமை வாழ்க்கையும் இருண்டு பாழாய்ப்போனது. உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், எழுவரையும் தமிழக அரசே விடுதலை செய்யலாம் என்று கூறிய பின்னரும், இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு அவர்களை விடுதலை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஆளுநருக்குக் கோரிக்கை விடுத்தும், ஆளுநர் அந்தக் கோரிக்கையை குப்பைத் தொட்டியில் போடுவது போல் போட்டுவிட்டார்.

இந்தப் பிரச்சினை குறித்து மத்திய அரசிடம் கருத்துக் கேட்க வேண்டிய அவசியமே கிடையாது. ஆனால் மத்திய அரசிடம் கருத்துக் கேட்டதாகவும், மத்திய அரசு அதற்கு தடை போடுவதாகவும் மோசடி நாடகத்தை இதுவரை நடத்தி வந்தனர்.

ஏழு தமிழர்களை விடுதலை செய்க - முதல்வர் ஸ்டாலினிடம் வைகோ வலியுறுத்தல் | Vaiko Requests Cm Stalin To Release Seven Tamils

ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கருத்தை ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி வருகிறது. எனவே தமிழக முதலமைச்சர் மாண்புமிகு தளபதி ஸ்டாலின் அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்து ஆணை பிறப்பித்து கோடானு கோடி தமிழர்களின் உள்ளத்தில் பால்வார்க்கும் செய்தியாக நடவடிக்கை எடுக்குமாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அன்போடு வேண்டுகிறேன்” என்றுள்ளார்.

எழுவர் விடுதலை என்பது நீண்ட காலமாக நிறைவேறாத கோரிக்கையாக இருந்து வருகிறது. மத்திய அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால் மாநில அரசின் தீர்மானத்தை ஆளுநர் ஏற்கவில்லை.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2021 சட்டமன்றத் தேர்தலிலும் எழுவர் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது திமுக அரசு அமைந்தவுடன் இந்த கோரிக்கை மீண்டும் வலுவாக எழுந்துள்ளது.