அனைத்து ரயில்களும் மணப்பாறையில் நின்று செல்ல வேண்டும் - வைகோ
அனைத்து ரயில்களும் மணப்பாறையில் நின்று செல்ல வேண்டும் என வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மணப்பாறை
திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு அடுத்ததாக உள்ள பெரிய நகரம் மணப்பாறை. இந்நகரில் இருந்து கல்வி - வேலை வாய்ப்புகளுக்காக சென்னை மற்றும் மதுரை உள்பட பெரு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் ரயில் பயணம் மேற்கொள்ள வேண்டியுள்ளது. மணப்பாறையைச் சுற்றிலும் ஏராளமான சிறு தொழில் முனைவோர் உள்ளனர்.
புத்தாநத்தம், துவரங்குறிச்சி உள்ளிட்ட ஊர்களில் இருந்து ஆயத்த ஆடைகள் தயாரித்து வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. மணப்பாறை - திருச்சியிலிருந்து 45 கிமீ தூரத்திலும், திண்டுக்கல்லில் இருந்து 65 கிமீ தூரத்திலும் உள்ளது. திருச்சி, திண்டுக்கல்லுக்கு இடைப்பட்ட 110 கிமீ-க்கு இடையில் மணப்பாறை ரயில் நிலையம் மட்டுமே உள்ளது. அகல ரயில் பாதை அமைக்கப்படுவதற்கு முன்பு மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று சென்றன.
ரூ.15 லட்சம் வருமானம்
அதன்பின் பொதுமக்களின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகுதான் ஒரு சில துரித ரயில்கள் நின்று செல்கின்றன. திருச்சியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் இண்டர்சிட்டி ரயில் மணப்பாறையில் நிற்க வலியுறுத்தி மதிமுக ஒருங்கிணைத்த அனைத்துக் கட்சிகளின் போராட்டக் குழுவின் சார்பில் 2014-ம் ஆண்டு உண்ணாவிரதம், கடையடைப்பு என பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது. இருவழி நிறுத்தமாக இருந்த பாண்டியன் விரைவு ரயில், தற்போது மதுரை - சென்னை ஒருவழித் தடத்தில் மட்டுமே நின்று செல்கிறது.
எனவே சென்னை - மதுரை ரயிலையும், வாரம் மூன்று முறை இயக்கப்படும் ராமேஸ்வரம்-திருப்பதி துரித ரயில், தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படுகின்ற அந்தியோதயா உள்ளிட்ட மணப்பாறை வழியாகச் செல்லும் அனைத்து ரயில்களையும் மணப்பாறையில் நிறுத்த கேட்டுக்கொள்கிறேன். தற்சமயம், மணப்பாறை ரயில் நிலையத்தில் மாதம் ரூ.15 லட்சம் பயணச்சீட்டு வருமானம் கிடைக்கின்றது.
வைகோ வேண்டுகோள்
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி ஜனவரி 30ஆம் நாள் திங்கள்கிழமை மணப்பாறை சட்டமன்றத் தொகுதி மதிமுக சார்பாக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் தலைமையில், மணப்பாறை நகரச்செயலாளர் எம்.கே.முத்துப்பாண்டி, மணப்பாறை ஒன்றியச் செயலாளர்கள் ஆ.துரைராஜ், ப.சுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில் ரயில் மறியல் போராட்டம் மணப்பாறையில் நடைபெற உள்ளது.
ஆகவே, மணப்பாறை மக்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று, மத்திய ரயில்வே நிர்வாகம் மணப்பாறையில் அனைத்து ரயில்களும் நின்று செல்வதற்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.