தமிழ்நாட்டில் உள்ளதை போன்று மோசமாக எங்கும் இல்லை - வைகோ ஆவேசம்
ஆர்.என்.ரவியை போன்ற தற்குறி வேறு யாரும் இல்லை என வைகோ பேசியுள்ளார்.
வைகோ
மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில், பேரறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சின் பொதுச் செயலாளர் வைகோ அங்குள்ள அண்ணாவின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், திராவிட இயக்கத்தை சாய்க்க இந்துத்துவ அமைப்புகள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அது முடியாது. 3 ஆண்டு ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார் என தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர்
மேலும், திமுக ஆட்சிக்கும் கட்சிக்கும் எந்த இடையூறு வந்தாலும், அதை தடுக்கின்ற போர்வாளாக மதிமுக இயங்கும் என்பதை திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டணி என்பதை தாண்டி திராவிட இயக்கத்தை காக்க இந்த பணியை செய்தாக வேண்டும் என பேசினார்.
மாநிலப் பாடத் திட்டம் மோசமானது என்ற ஆளுநரின் கருத்து குறித்த கேள்விக்கு, “தமிழ்நாட்டில் இருப்பது போல ஒரு மோசமான ஆளுநர், வேறு எந்த மாநிலத்திலும் இருந்தது இல்லை. ஆளுநர் ஆர்.என்.ரவி தினமும் எதையாவது உளறி வருகிறார். ஆர்.என்.ரவியை போன்ற தற்குறி வேறு யாரும் இருக்க முடியாது.
ஆளுநர் பதவியே தேவையில்லை என்று அண்ணா சொன்னார். முந்தைய ஆளுநரை எதிர்த்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மதிமுக போராட்டம் நடத்தியது. தேவைப்பட்டால் மீண்டும் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். என தெரிவித்தார்.