தவெக ஆட்சியை கவிழ்க்க சதியா? திமுகவிற்கு வைகோ சவால்
தவெக ஆட்சியை கவிழ்த்து பாருங்கள் என வைகோ சவால் விடுத்துள்ளார்.
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி?
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், முதல்வர் விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று, பிற கட்சிகளுடன் ஆதரவுடன் ஆட்சியைமைத்துள்ளது.
இந்த ஆட்சி இன்னும் 6 மாதங்களில் கவிழ்ந்து விடும் என திமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் பேசி வருகின்றனர்.
மேலும், தவெக ஆட்சியை கவிழ்க்க தவெக எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியதாக 12 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வைகோ சவால்
சென்னை எழும்பூரில் நடைபெற்ற மதிமுக ஏடான சங்கொலி 30 ம் ஆண்டு நிறைவு விழாவில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஆட்சியை கவிழ்க்க முடியாது என சவால் விட்டுள்ளார்.

இந்த நிகழ்வில் பேசிய அவர், "திமுகவும் அதிமுகவும் இரு மாபெரும் கட்சிகள். இவர்களை யாராலும் அசைக்க முடியாது என்பதை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தகர்த்துத் தரைமட்டமாக்கி, தூள்தூளாக்கிவிட்டு முதல்வராகி இருக்கிறார் ஜோசப் விஜய்.
கடந்த 15, 20 நாட்களாக முதலமைச்சர்கள் விஜய் மீதும் அவருடைய அரசு மீதும் நாள்தோறும் விஷக்கனைகள் எதிரிகள் வட்டாரம் மட்டுமல்ல கூட்டணி கட்சிகள் வட்டாரத்திலிருந்தும் விமர்சிக்கிறார்கள்.
திமுக கூட்டணியில் இருந்த போது இது போன்ற கண்டன குரல்கள் எழுப்பியது உண்டா ? கண்டன குரல் ஏன் அன்று எழவில்லை. இப்போது நாள்தோறும் அறிக்கை செய்தியாளர்களை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன?
எங்கே இருக்கிறேனோ அங்கே விசுவாசமாக இருப்பவன்தான் நான். கூட்டணி இருக்குமிடத்தில் விசுவாசமாக இருப்பவன் நான்.
இப்போது தீர்க்கமான முடிவெடுத்து, தவெகவுடன் கரம் கோர்த்திருக்கிறோம். ஆட்சியைக் கவிழ்த்து விடுவோம் என்று மிரட்டிப் பார்க்காதீர்கள். பாஜகவுடன் உடன்பாடு வைக்கப் போகிறீர்களா?
செய்து பாருங்கள் நான் சவால் விடுகிறேன். மீண்டும் தேர்தல் வரட்டும் 108 இல்லை 180 இடங்களில் தமிழக வெற்றிக் கழக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்" என பேசியுள்ளார்.