துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்; குடும்பமே கழகமா மாறியிருக்கு - வைகைச்செல்வன் சாடல்
உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி குறித்து வைகைச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் பதவி
புதுக்கோட்டை, ஆதனகோட்டையில் அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், பங்கேற்க வருகை தந்த அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவது குடும்ப அரசியலின் உச்சம். கழகத்தை குடும்பமாக கருதினார் அண்ணா. ஆனால், திமுக குடும்பத்தையே கழகமாக மாற்றி ஆட்சி அதிகாரத்தை அவர்களுக்குள்ளே தக்கவைத்து வருகின்றனர்.
வைகைச்செல்வன் காட்டம்
மறைந்த தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், தற்போது உதயநிதி ஸ்டாலின் என்று நைச்சியாக கலைஞர் கருணாநிதி குடும்பத்திற்கு என்று அதிகாரம் அவர்களுக்கு உள்ளாகவே இருக்கிறது. தி.மு.க-வின் சாதாரண தொண்டன் முதல் பெரிய தலைவர்கள் வரை எவ்வளவு நபர்கள் இருக்கிறார்கள்.
அதில், ஒருவர்கூட துணை முதல்வராக வாய்ப்பு தகுதி இல்லையா என்பதை நாங்கள் கேட்கின்றோம். தந்தை பெரியார் போட்ட விதை பேரறிஞர் அண்ணா உடைய பேச்சு இதுதான் முழுமையான காரணம்.
பெரியார், அண்ணாவின் கொள்கைகளை நீர்த்துப் போக செய்துவிட்டது திமுக பேரறிஞர் அண்ணாவுடைய கொள்கை கோட்பாடு லட்சியங்களை மார்பிலும், தோளிலும் தூக்கி சுமப்பது அதிமுக தான் எனத் தெரிவித்துள்ளார்.