“மரணத்தை விட கொடியது புறக்கணிப்பு”- அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்
முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு தலைவர் தன்னை விட இயக்கமும், அதன் கொள்கைகளும் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவராக இருக்க வேண்டும்.

ஆனால், இயக்கமும், தொண்டர்களும் பாதிக்கப்பட்டாலும், தானே நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நல்ல தலைவராக இருக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
தனது அடையாளத்தை அதிமுக இழந்துவிட்டது
மேலும், திமுகவுடன் இணைந்து ஆட்சியமைக்க முயன்றதன் மூலம், திமுக எதிர்ப்பு என்ற தனது அடையாளத்தை அதிமுக இழந்துவிட்டதாகவும், தவறான அரசியல் முடிவுகள் கட்சியை வெற்றிப் பாதையிலிருந்து விலக்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தேர்தல் களத்தில் தனித்து விடப்பட்ட நிலையிலும் கட்சிக்காக பிரசாரம் செய்ததாகக் குறிப்பிட்ட அவர், "மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு" என்பதை உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மாணவப் பருவம் முதல் இயக்கத்துடன் இணைந்து செயல்பட்ட நிலையில், விலக வேண்டிய சூழல் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும், இதுகுறித்து உரிய நேரத்தில் மேலும் விரிவாகப் பேசுவேன் என்றும் வைகை செல்வன் தெரிவித்துள்ளார்.