செம்ம எனர்ஜியுடன் மீண்டும் லண்டன் பறந்த நடிகர் வடிவேலு!
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடித்தபோது அப்படத்தின் தயாரிப்பாளர் ஷங்கருடன் வடிவேலுவுக்கு மோதல் ஏற்பட்டது.
இதன் காரணமாக படத்தில் நடிக்க மறுத்த வடிவேலு மீது ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு, அவர் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது.
இதனால், கடந்த சில ஆண்டுகளாக படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார் வடிவேலு. சில ஆண்டுகள் படங்களில் நடிக்காவிட்டாலும் மீம்ஸ் மூலம் தினந்தோறும் மக்களை மகிழ்வித்து வந்தார் வடிவேலு.
சமீபத்தில் வடிவேலு மீதான ரெட் கார்டு நீக்கப்பட்டு, அவர் மீண்டும் படங்களில் நடிக்க அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது வடிவேலுவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சுராஜ் இயக்கத்தில் உருவாகும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக லண்டன் சென்று திரும்பிய நடிகர் வடிவேலுவிற்கு கடந்த மாதம் கொரோனா பாதிப்பு உறுதியானது.
இதனால் படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், தற்போது அவர் குணமாகி மீண்டும் நாய்சேகர் படத்தின் பணிகளை தொடங்கியுள்ளார். மீண்டும் இப்படத்திற்கு இசையமைக்கும் பணிகளை லண்டனில் வைத்துக்கொள்ள படக்குழுவினர் விரும்பினர்.
இதனை ஏற்றுக்கொண்ட லைகா நிறுவனம், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குநர் சுராஜ், கதையின் நாயகன் வடிவேலு ஆகியோரை லண்டனுக்கு வரவழைத்துள்ளது.
'வைகைப்புயல்' வடிவேலு சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கதையின் நாயகனாக நடிப்பதாலும், அவர் இந்த படத்தில் பாடுவதாலும் லண்டனில் நடைபெற்று வரும் படத்திற்கான இசையமைப்பு பணி கவனம் பெற்றிருக்கிறது.