கெத்தா யூ டேர்ன் போட்டு திரும்பிய நடிகர் வடிவேலு - சிரிப்புக்கு வயதில்லை, சிரிப்பை கொடுப்பவருக்கும் வயதில்லை!
தமிழ்த் திரைப்படத்துறையில் ‘வைகைப் புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள், தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர் ஆவார். நகைச்சுவையில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து, சினிமா ரசிகர்களை சிரிப்பு என்னும் மாபெரும் கடலில் மூழ்க வைத்தவர்.
‘ப்ரண்ட்ஸ்’, ‘வின்னர்’, ‘சச்சின்’, ‘சந்திரமுகி’, ‘மருதமலை’, ‘கிரி’, ‘தலைநகரம்’, ‘இங்கிலிஷ்காரன்’, ‘காதலன்’, ‘ராஜகுமாரன்’, ‘காலம் மாறிப்போச்சு’, ‘ராசையா’, ‘பாரதி கண்ணம்மா’, ‘பாட்டாளி’, ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘மாயி’, ‘சுந்தரா ட்ராவல்ஸ்’, ‘கிரி’, ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘கருப்பசாமி குத்தகைகாரர்’, ‘போக்கிரி’, ‘எல்லாம் அவன் செயல்’, ‘வெடிகுண்டு முருகேசன்’ போன்ற எண்ணற்றத் திரைப்படங்கள் இவரின் நகைச்சுவை நடிப்பிற்கு சான்றுகளாகும். நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த அற்புதக் கலைஞன்.
பிறப்பு:
வைகைப் புயல் வடிவேலு அவர்கள், 1960 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மதுரையில், தந்தையார் நடராச பிள்ளைக்கும், தாயார் வைத்தீஸ்வரிக்கும் மகனாகப் பிறந்தார்.
சினிமாவில் காலடி:
1991 ஆம் ஆண்டு கஸ்தூரிராஜாவின் இயக்கத்தில், ராஜ்கிரண் தயாரித்து, கதாநாயகனாகவும் நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ என்ற திரைப்படத்தில் முதன் முதலாக ஒரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு பெற்ற இவர், ஒரு பாடலையும் பாடியிருப்பார். ‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடல் மூலம் திரையில் தோன்றிய இவர், தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ஒரு நடிகனாகவும், பாடகனாகவும் தன்னுடைய பெயரைத் தமிழ் சினிமாவில் பதிவு செய்தார்.
அதன் பிறகு, மற்றுமொரு தயாரிப்பாளர் நடராஜன் மூலம், 1992 ஆம் ஆண்டு ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் ‘சின்னகவுண்டர்’ என்ற படத்தில் கதாநாயகன் விஜயகாந்த் அவர்களுக்குக் குடை பிடிக்கிற பண்ணையாள் கதாபாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படத்திற்கு பிறகு, ஆர்.வி. உதயகுமார் அவர்களால் பிரபு, கார்த்திக், கமல் என அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவை ஆட்சி செய்துகொண்டிருந்த கதாநாயகர்களின் அறிமுகம் கிடைக்கப்பெற்றது.
பாடகர் வடிவேலு:
‘எட்டணா இருந்தா’ (எல்லாமே என் ராசாதான்), ‘சிரிப்பு வருது சிரிப்பு வருது’ (வெற்றி கொடுக் கட்டு), ‘ஊனம் ஊனம்’ (பொற்காலம்), ‘போடா போடா புண்ணாக்கு’ (என் ராசாவின் மனசிலே), ‘வாடி பொட்ட புள்ள வெளியே’ (காலம் மாறிபோச்சு), ‘ஆடிவா பாடி வா’ (இம்சை அரசன் 23ஆம் புலிகேசி), ‘கட்டுனா அவளை கட்டுனும்டா’ (ஜெயசூர்யா), ‘விக்கலு விக்கலு’ (பகவதி), ‘ஏக் தோ தீனுடா’ (கூடி வாழ்ந்தால் கோடி நன்மை), ‘மதுரக்கார விவேக்கு’ (லூட்டி), ‘நாலு அடி ஆறு’ (என் புருஷன் குழந்தை மாதிரி).
ரீ எண்ட்ரி அடித்த வடிவேலு:
அவர் திரையுலகை விட்டு நீங்கி இருந்த இரண்டு ஆண்டு காலம், தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாமல், ரசிகர்களுக்கும் மாபெரும் இழப்பை ஏற்படுத்தியது எனலாம். குறிப்பாக, தமிழ் சினிமா ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது திரையில் தோன்றுவார் என ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ‘ஜகஜால புஜபல தெனாலிராமன்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை யுவராஜ் இயக்குகிறார். வைகைப்புயல் வடிவேலு அவர்கள், மீண்டும் திரைப்படத்தில் நடிக்கிறார் என்ற செய்தி அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆயிரம் நகைச்சுவை கலைஞர்கள் வந்தாலும் வடிவேலுக்கு இணையாக நிறுத்த இயலாது. அப்படி தனக்கென்று தனி இடத்தை பிடித்து சாதனை புரிந்தவர் நடிகர் வடிவேலு. சிரிப்புக்கு வயதில்லை, அதே போன்று சிரிக்க வைப்பவனுக்கும் வயதில்லை.. வயதால் முதிர்ச்சியடைந்தாலும், சிரிப்பால் என்றும் இளமையாக திகழும் நடிகர் வடிவேலு, ஒவ்வொருவர் முகத்திலும் புன்னகையாய் வாழ்வார். சிரிப்பு இருக்கும் வரை, வடிவேலுவும் இருப்பார் என்பது அழிக்கப்படாத ஒன்றாகும்.