வன்கொடுமை...சோகம்...போராட்டம்...தீர்ப்பு..!வாச்சாத்தி வழக்கின் முழு வரலாறு

Tamil nadu ADMK Thanjavur
By Karthick Sep 29, 2023 03:30 PM GMT
Report

இன்று தீர்ப்புவழங்ப்பட்டுள்ள வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் முழு பின்னணியை தற்போது காணலாம்.

வாச்சாத்தி வழக்கு

வீரப்பன் - தமிழக அரசியலும், மக்களும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாத பெயர். 90-களில் இவரின் நடவடிக்கைகள் தீவிரமாக இருந்த போது, பல சோதனைகளை கிடைத்த தகவல்களின் படி அதிகாரிகள் மேற்கொண்டனர். அப்படி கிடைத்த தகவல் ஒன்றின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின் விளைவே வாச்சாத்தி சோகம். 1992-ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் மலைக்கிராமமான வாச்சாத்தி என்னும் இடத்தில் வீரப்பன் சந்தனமரங்களை வெட்டி கடத்துவதற்கு இந்த கிராமமக்கள் உதவியதாக புகார் எழுந்தது.

vachathi-full-case-history

இதைத்தொடர்ந்து தமிழக வனத்துறையினர், விசாரிப்பதற்காக காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறை ஊழியர்களின் உதவியுடன் ஒட்டுமொத்த கிராமத்தையும் சுற்றிவளைத்து தீவிர சோதனை வேட்டையில் மேற்கொண்டனர். சோதனையின் முடிவில், வாச்சாத்தி கிராமத்தை சேர்ந்த 133 பேரை கைது செய்யப்பட்டனர். அவர்களில் 15 ஆண்கள், 90 பெண்கள், 28 குழந்தைகள் அடக்கம்.

ஆனால், இதனை கடுமையாக எதிர்த்த வாச்சாத்தி கிராம மக்கள், தங்களுக்கும் சந்தன கட்டை கடத்தலுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்று கூறி, இந்த சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கையின்போது வனத்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் அதிகாரிகள் தங்கள் கிராமத்தை சேர்ந்த 18 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் தெரிவித்தனர். மேலும் மக்களை அடித்து துன்புறுத்தப்பட்டதாகவும், குடிசைகள் தகர்க்கப்பட்டு, பொருட்கள் நாசப்படுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினார். இந்த புகார்கள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

vachathi-full-case-history

முதலில் அரசு இதனை மறுத்த போதிலும், 1992 ஆம் ஆண்டு ஜூன் 22-ஆம் தேதி முறையான புகார் பதிவுசெய்யப்பட்டது. அப்போது ஆட்சியில் அதிமுக அரசு இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மீதான விசாரணையை தமிழக காவல்துறை முறையாக நடத்தவில்லை என்ற புகார்கள் எழுந்ததால் வழக்கு CBI'க்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த CBI அதிகாரிகள் மற்றும் 4 IPS அதிகாரிகள் வனத்துறையினர், காவல்துறை, வருவாய் துறையினர் என 269 பேர் மீது பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு நடந்த19 ஆண்டுகளில் குற்றம்சாட்டப்பட்டிருந்தவர்களில் 54 பேர் உயிரிழந்தனர். தர்மபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிபதி குமரகுரு 2011-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி மீதமுள்ள 215 பேரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தார். அதில் 126 பேர் அரசின் வனத்துறை அலுவலர்கள் - 84 பேர் தமிழக காவல்துறையினர் - ஐந்து பேர் வருவாய்த் துறை அதிகாரிகள். 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்த தர்மபுரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து தண்டனை பெற்றவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

vachathi-full-case-history

நீதிபதி பி.வேல்முருகன் இந்த வழக்குகளை விசாரித்து வந்தார். கடந்த மார்ச் 4ம் தேதி சம்பவம் நடந்த வாச்சாத்தி மலை கிராமத்தில் நேரே சென்றும் ஆய்வு மேற்கொண்ட அவர், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்நிலையில் தான் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதி பி.வேல்முருகன் அளித்த தீர்ப்பில், மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து 215 பேரின் தண்டனையை உறுதிசெய்தார். மேலும், பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு 10 லட்ச ரூபாய் பணஉதவி அளிக்கும்படியும் அவர் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தனது தீர்ப்பில் நீதிபதி, பழங்குடியின பெண்களை காப்பாற்ற அப்போதைய அரசு அக்கறை காட்டவில்லை என குறிப்பிட்டு, தவறிழைத்த அதிகாரிகளை பாதுகாக்கவே முயன்றது என குற்றம் சாட்டினார்.