"கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி ஒன்றே சிறந்த ஆயுதம்" - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
தமிழகத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது ,தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 52பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 53 ஆயிரத்து 552 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 34 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதார அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை தொடங்கியது.
இக்கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் தலைமை செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.
இந்நிலையில் காணொலி வாயிலாக ஆட்சியர்கள், அதிகாரிகள் மத்தியில் பேசிய முதல்வர் , பொது இடங்களிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும். கொரோனாவை எதிர்கொள்ள தடுப்பூசி ஒன்றே சிறந்த ஆயுதம். தமிழ்நாட்டில் 41.66% பேருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும். எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும்.வட மாநிலங்கள் மற்றும் சென்னை ஐஐடியில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.
மக்கள் முக கவசம் அணிவது உறுதி செய்யும் வகையில் ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஒரு வாரத்தில் பல மாநிலங்களில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது.
பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் குறைவான நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாதவர்களுக்கு தடுப்பூசி போடுவதை உறுதி செய்வது நம் முன் இருக்கும் சவால் என்றார்.