’தடுப்பூசி செலுத்துங்க’ உதகை தாவரவியல் பூங்காவில் தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம்
கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்சி ஏற்படுத்தும் வகையில் உதகை தாவரவியல் பூங்காவில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் மலர் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுப்பதால் கோடை விழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்த ஆண்டு உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 250 ரக மலர் நாற்றுகளில், 5.50 லட்சம் செடிகள் சீசனுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளன. இதில் 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் வண்ண மலர்கள் பூத்து குறுங்குகின்றன.
தற்போது, பூங்காவுக்கு செல்ல தடை உள்ளதால் கடந்த ஆண்டை போலவே மலர் அலங்காரம் செய்து மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று பூங்காவில் கொரோனா தடுப்பூசி செலுத்துங்க என்ற அறிவுரையுடன் மலர் தொட்டிகளில் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறுகையில் முதல் கட்டமாக, தடுப்பூசியின் முக்கியத்துவம் கருதி மலர்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரும் நாட்களில் வெவ்வேறு அலங்காரங்கள் செய்யப்படும் என தெரிவித்தார்.