மின்சார ரயில்களில் பயணிக்க போறீங்களா? - அப்படின்னா..இனிமே 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கட்டாயம்

mandatory south railways chennai electric trains double dose vaccination
By Swetha Subash Jan 08, 2022 10:22 AM GMT
Report

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிக்க 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் கட்டாயம் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் சென்னையில் நாளை 50% இருக்கைகளுடன் மின்சார ரெயில்கள் மட்டும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுவும் மாநில அரசின் வழிகாட்டுதல்களின்படி 50 சதவீதம் என்ற அடிப்படையில் ரயில்கள் இயக்கப்படும் என்றும்

அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே ரயில்களில் பயணிக்க வேண்டும் என்றும் தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

இது தவிர பொதுப்போக்குவரத்து மற்றும் மெட்ரோ ரயில் சேவைகள் நாளை இயங்காது. இந்நிலையில் ரயில்களில் பயணம் செய்பவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ளது.

அதில் முக்கியமாக ரயில்களில் பயணம் செய்வோர் கட்டாயமாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திருக்க வேண்டும்.

இந்த மாதம் 31-ம் தேதி வரை மின்சார ரயில்களில் பயணிக்க தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளது.

முன்கள பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள், தீயணைப்புத்துறை, காவல்துறை, பத்திரிக்கைத்துறை, முக்கிய அரசுப் பணிகளுக்காக செல்பவர்கள் உள்ளிட்டோருக்கு மட்டுமே நாளை அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பயணிகள் பயணம் செய்யும்போது கொரோனா தடுப்பூசி சான்றிதழ், அடையாள அட்டைகளை காட்டினால் மட்டுமே பயணிச்சீட்டு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் டிக்கெட் பரிசோதகர் கேட்கும் போது 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

UTS செயலி மூலம் முன்பதிவு செய்யும் வசதி நாளை மறுநாள் முதல் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் முக கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும், முக கவசம் அணியாத ரயில் பயணிகளுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வேயின் இந்த புதிய கட்டுப்பாடுகள் வரும் 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.