தடுப்பூசி போட்டால் மட்டுமே இந்த இடங்களில் எல்லாம் அனுமதி - தமிழக அரசு அதிரடி உத்தரவு
கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி ஒன்றே தீர்வாக அமைந்துள்ள நிலையில் அதனை பொதுமக்களுக்கு செலுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
தடுப்பூசி மீதான பயம் காரணமாக முதலில் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் காட்டிய மக்கள் தற்போது மிக ஆர்வமாக போட்டு வருகின்றனர். இதன் காரணமாக தமிழக அரசு வாரந்தோறும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது.
தொடர் தடுப்பூசி முகாம் காரணமாகவும், தமிழக அரசின் தீவிர நடவடிக்கை காரணமாகவும் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து விட்டது. இந்த நிலையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக பொது சுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. அதில் பள்ளி, கல்லூரி, கடைகள், சந்தைகள், தெருக்களில் தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கடை ஊழியர்கள், தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுரை விடுத்துள்ளது.
மேலும் மக்கள் கூடும் இடங்களில் தடுப்பூசி செலுத்தியது குறித்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.