ஜெயலலிதா நினைவிடத்தில் அக்கா..அக்கா..என கதறி அழுத சசிகலா

சொத்து குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா ஜனவரி மாதம் விடுதலையானார்.இதனையடுத்து அவர் அரசியலில் இருந்து ஒதுங்குவதாகவும் அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது.இதையடுத்து பல்வேறு அதிமுக நிர்வாகிகளிடமும் சசிகலா செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தார்.

அதில், அதிமுகவை மீட்டெடுப்பதில் தான் ஈடுபடுவேன் எனத் தொடர்ந்து கூறிவந்தார். அப்படி, சசிகலாவிடம் பேசிவந்த அதிமுக நிர்வாகிகளை அக்கட்சித் தலைமை உடனடியாக நீக்கி நடவடிக்கை எடுத்தது.

நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக தோல்வியைச் சந்தித்துள்ளது. எதிர்பார்த்த வெற்றியை அக்கட்சி பெறவில்லை.

மேலும், அதிமுகவின் பொன்விழா ஆண்டு நாளை (17ம் தேதி) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் சசிகலா, இன்று (16ம் தேதி) எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மரியாதை செலுத்த தன் இல்லத்திலிருந்து அதிமுக கொடி பொருத்திய காரில் புறப்பட்டு மெரினா சென்றார்.

மெரினாவில் ஜெயலலிதா, எம்ஜிஆர் நினைவிடங்களிலும் அவருடைய ஆதரவாளர்கள் சூழ்ந்தனர். சிறை செல்லும் முன்பு 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஜெயலலிதா நினைவிடத்துக்குச் சென்று சசிகலா சபதம் செய்தார்.

இந்நிலையில், சிறையில் இருந்து விடுதலையாகி வந்தபின் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா இன்று முதல் முறையாகச் சென்றார்.

அங்கு கண்ணீர் சிந்தியபடி மரியாதை செலுத்தினார்.அப்போது நினைவிடத்தில் சசிகலா அக்கா அக்கா என கூறி கதறி அழுதார்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்