சசிகலாவை அதிமுகவில் இணைக்க வேண்டும் - முன்னாள் எம்.எல்.ஏ வலியுறுத்தல்
சசிகலா மற்றும் டிடிவி தினகரனை அதிமுகவில் இணைக்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வலியுறுத்தல்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. இதனால் பல்வேறு இடங்களிலும் அதிமுக படு தோல்வியை சந்தித்தது.
இந்நிலையில் நேற்று தேனியில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திடம் அம்மாவட்ட நிர்வாகிகள் மீண்டும் சசிகலா,டிடிவி.தினகரனை கட்சியில் இணைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு எதிராக கடலுாரில் அதிமுக நிர்வாகிகள் அதிமுகவில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனை இணைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

இதனிடையே முன்னாள் எம்.எல்.ஏ ஆறுகுட்டி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், அதிமுகவில் மீண்டும் சசிகலா மற்றும் டிடிவி தினகரன் இணைய வேண்டும் என கூறினார்.
இரண்டு முறை தனக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதாகவும்,ஆனால் இந்த முறை தனக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என பேசினார்.
மேலும் அவர்,சசிகலா தலைமையேற்று டிடிவி தினகரன் வழிகாட்டுதல்கள் படி சென்றால் தான் கட்சியை வழிநடத்த முடியும் என்றார்.
அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர்,துணை ஒருங்கிணைப்பாளர் என இரு தலைமை இருப்பதால் கோஷ்டிகள் சேர்ந்து கட்சி வளர்ச்சியை நோக்கி செல்வதில்லை என்று் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படு தோல்வியை சந்தித்தது கட்சி தொண்டர்களை நோக அடித்துள்ளதாக தெரிவித்தார்.
ஒபிஎஸ்,ஈபிஎஸ் கட்சியை வழி நடத்தி வரும் நிலையில் தொடர்ந்து கட்சி தோல்வியை சந்தித்து வருவதாக கூறினார்.
அதிமுகவிற்கு ஒரு தலைமை மட்டுமே தேவை என்று வலியுறுத்தியுள்ளார்
அதிமுகவுக்கு எதிராகவும்,சசிகலாவுக்கு ஆதரவாக பேசி வந்த கட்சி நிர்வாகிகளை அதிமுக தலைமை நீக்கி வந்தது குறிப்பிடத்தக்கது.