நடு வீட்டில் மனைவி, குழந்தைகளை கொன்று புதைத்து அதன் மீதே வாழ்ந்த வாலிபர் - கள்ள உறவால் நேர்ந்த கொடுமை
உத்திர பிரதேசத்தில், கள்ள உறவு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து வீட்டில் புதைத்த நபரை போலீஸ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உத்திரபிரதேசத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த ராகேஷ், கடந்த 2012-ம் ஆண்டு ஈடாவை சேர்ந்த ரத்னேஷ் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனை தொடர்ந்து இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.
இவர்கள் குடும்பமாக வசித்து வந்த நிலையில், ராகேஷுக்கு அதே பகுதியில் வசிக்கும் ஒரு பெண் போலீசுடன் கள்ள உறவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த ராகேஷ், கள்ள உறவுக்கு இடையூறாக இருப்பதால், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கொடூரமாக கொலை செய்துவிட்டு அவர்களது உடல்களை நடு வீட்டிலேயே புதைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை என போலீசில் அவரே புகார் அளித்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ராகேஷின் வீட்டில் சோதனை செய்த போது அவர்களின் உடல் வீட்டில் புதைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ராகேஷை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.