மெல்ல மெல்ல புதையும் ஜோஷிமத் நகரம் - தற்போதைய நிலைமை என்ன?
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இமயமலை அடிவாரத்தில் சமோலி மாவட்டத்தில் அமைந்திருக்கும் பூகோள சொர்க்கம் என அழைக்கப்படும் ஜோஷிமத் நகரம்.
ஜோஷிமத்
இப்போது, நிலச்சரிவு அழிவு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இமயமலையில் 6,150அடி உயரத்தில் அமைந்துள்ள பகுதி தான் இந்த ஜோஷிமத் நகரம். இந்த மலையில் ஏறும் குழுவினர்களுக்கும், பத்ரிநாத் கோயில் புனித யாத்திரை செல்பவர்களுக்கும் ஜோஷிமத் நகரம் நுழைவாயிலாக அமைந்துள்ளது.
இது ஆதி சங்கரர் உருவாக்கிய 4மடங்களில் ஒன்றாகும். சில நாட்களுக்கு முன் ஜோஷிமத் பகுதியில் உள்ள பல இடங்களில் நில வெடிப்பு ஏற்பட்டு கட்டடங்களிலும் விரிசல் உண்டானது. இதை தொடர்ந்து அந்த பகுதியில் புவியியல் வல்லுநர்கள் உடனடியாக ஆய்வு பணியை தொடங்கினார்கள். அப்போது, அந்த ஆய்வில் தெரியவந்த உண்மை என்னவென்றால், மோசமான புவியியல் அமைப்பைக் கொண்ட இந்த நகரம் அடிக்கடி பல்வேறு இயற்கை பேரிடர்களை சந்தித்துள்ளது.
நிலச்சரிவு
இதனை தொடர்ந்து, ஏற்பட்டுள்ள இந்த நில வெடிப்பு குறித்து நிபுணர்கள் ஆய்வு செய்த போது திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் ஜோஷிமத் நகரம் மெல்ல மெல்ல புதைந்து வருவது தான். ஆகவே, அங்குள்ள மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்நிலையில் அந்தப்பகுதி தொடர்பான செயற்கைகோள் படங்களை நிபுணர்கள் ஆய்வு செய்த போது மேலும் அதிர்ச்சிக்குரிய தகவல் தெரியவந்துள்ளது.
அது என்னவென்றால் ஜோஷிமத் நகரம் மட்டுமல்ல அதை சுற்றியுள்ள பகுதிகளும் மெல்ல மெல்ல பூமிக்குள் புதைந்து வருவது தான். அதாவது, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அந்த பகுதி முழுவதும் சுமார் 6.5செ.மீ அளவிற்கு பூமிக்குள் புதைந்து வருவதை செயற்கைகோள் படங்கள் காமித்துள்ளது. ஜோஷிமத் நகரில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மற்றொரு மலைநகரத்திலும் நில வெடிப்பு மற்றும் கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
நகரமயமாக்கல்
இந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. மலை நகரமான ஜோஷிமத் பகுதியில் மேற்கொள்ளப்படும் நகரமயமாக்கல் பணிகளால் தான் இது போன்ற மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த 1976ஆம் ஆண்டிலேயே ஜோஷிமத் நகரம் எதிர்காலத்தில் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து மிஸ்ரா கமிஷன் வெளியிட்ட அறிக்கையை தற்போது பலரும் சுட்டி காட்டுகிறார்கள்.
அந்த அறிக்கையில், ஜோஷிமத் நகரில் வளர்ச்சி பணிகள் எந்த அளவுக்கு நடைபெற வேண்டும், என்னென்ன திட்டங்களை செயல்படுத்த கூடாது, எந்த இடங்களில் வீடுகளை அனுமதிக்க கூடாது என்பது போன்ற எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதையும் மீறி கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் அந்த நகரம் புதையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
புதையும் அபாயம்
ஜோஷிமத் நகருக்கு அருகில் தேசிய அனல்மின் கழகம் சார்பில் அமைக்கப்பட்டு வரும் தபோவன் திட்டத்தால் தான் தங்கள் நகரம் இப்படி மோசமான பாதிப்பை சந்தித்துள்ளதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டுகிறார்கள். அதிகமான சுற்றுலா பயணிகள் வருவதால் அங்கு ஏராளமான விடுதிகளும் கட்டடங்களும் கட்டப்பட்டுள்ளன. மேலும், சாலை விரிவாக்க பணிகளுக்காக மலைப்பகுதிகள் வெட்டப்படுகின்றன.
இவைகளும் இந்த மோசமான சூழலுக்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இதையடுத்து விரிசல் ஏற்பட்ட கட்டடங்களை புல்டோசர் கொண்டு இடிக்கும் பணி தொடங்கப்பட்டது. அதற்கு உள்ளூர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அடுத்து என்ன நடவடிக்கை மேற்கொள்வது என்பது குறித்து உத்தரகாண்ட் அரசு தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
மோசமான சூழல்
உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி ஜோஷிமத் நகருக்கு சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினார். பின் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற அவர் நடவடிக்கை எடுத்துள்ளார். தற்போது, அங்கு 60 குடும்பங்கள் வேறு இடத்துக்கு குடிபெயர்ந்த நிலையில் 29 குடும்பங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
500 குடும்பங்கள் தங்களது பாதுகாப்பற்ற வீடுகளில் தொடர்ந்து வசித்து வரும் நிலையில் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில் முதல்கட்டமாக, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு வீட்டு வாடகையாக மாதம் 4,000 ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.