உத்தரகாண்ட் அரசியல் : காங்கிரஸ் கோட்டை பாஜக வசம் வந்தது எப்படி
கடந்த 2000-ம் ஆண்டு தனி மாநிலமாக உருவான உத்தரகாண்ட் மாநிலமும், உத்தரப்பிரதேசத்தைப்போல பா.ஜ.க-வின் அசைக்கமுடியாத கோட்டையாக உருமாறியிருக்கிறது.
உத்தரகாண்ட் அரசியல்
தேர்தலுக்கு முந்தைய, பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளில் பெரும்பாலானவை பா.ஜ.க - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளுமே சம பலத்தில் உள்ளதாகவும், தொங்கு சட்டமன்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறிவந்தன.
இந்த நிலையில், கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி தனிப்பெரும்பான்மையுடன் உத்தரகாண்ட்டின் ஆட்சி அதிகாரத்தை பா.ஜ.க.
மீண்டும் கைப்பற்றியது பாஜக கடந்த 2000-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்திலிருந்து, உத்தரகாண்ட் மாநிலம் பிரிக்கப்பட்டபோது, ஏற்கெனவே அந்தப்பகுதிகளில் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற எம்.எல்.ஏ-க்களின் பெரும்பான்மை அடிப்படையில், அங்கு தற்காலிக ஆட்சியை பா.ஜ.க அமைத்தது.
மீண்டும் பாஜக
அதன்பிறகு, முதல்முறையாக நடந்த உத்தரகாண்ட் சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட்டு, காங்கிரஸ் வெற்றிபெற்றது. அதைத்தொடர்ந்து நடந்த நான்கு சட்டமன்றத்தேர்தல்களிலும் காங்கிரஸ்-பா.ஜ.க என மாறிமாறி ஆட்சி அமைத்தது. கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க 57 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. காங்கிரஸ் கட்சியால் வெறும் 11 இடங்களை மட்டுமே பிடிக்கமுடிந்தது. பெரும்பான்மையான இடங்களில் பா.ஜ.க வெற்றிபெற்ற நிலையில், திரிவேந்திர சிங் ராவத் பா.ஜ.க முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதன்பிறகு, கடந்த 2021-ம் ஆண்டில் மட்டும் தீரத் சிங் ராவத், புஷ்கர் சிங் தாமி என அடுத்தடுத்து மூன்றுமுறை பா.ஜ.க முதலமைச்சர்கள் மாற்றப்பட்டனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் சட்டமன்றப் பதவிக்காலம் கடந்த மார்ச் 23-ம் தேதியோடு முடிவடைந்த நிலையில், அம்மாநிலத்தில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது.
பா.ஜ.க முதலமைச்சர் வேட்பாளராக புஷ்கர் சிங் தாமியும், காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக ஹரீஷ் ராவத்தும் அறிவிக்கப்பட்டனர். பிரதான கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ் தனித்துப்போட்டியிடும் நிலையில் ஆம் ஆத்மியும் முதல்முறையாக உத்தரகாண்ட் தேர்தலில் களமிறங்கியது. இதுதவிர பகுஜன் சமாஜ் கட்சி, இடதுசாரிகள், சுயேட்சைகள் என பலரும் தேர்தலில் போட்டியிட்டனர்.
கருத்துகணிப்புகளின் முடிவுகளில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் ஹரீஷ் ராவத் முந்துவதாகவும் தெரிவித்தது. எப்படி இருப்பினும் கருத்துக்கணிப்பின் முடிவில் குறைந்த அளவு வாக்கு வித்யாசமே இரண்டு கட்சிகளுக்கும் இருப்பதாக முடிவுகள் தெரிவித்தன
உத்தரப்பிரதேசத்தைப் போலவே உத்தரகாண்டிலும் பா.ஜ.க மத அரசியலை மிக எளிமையாகக் கையாண்டது. காரணம், உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும்பான்மையாக 5-ல் 4% சதவீத மக்கள், அதாவது 82% பேர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள்.
அதேபோல, இந்தியாவிலேயே மிக அதிகமாக முன்னேறிய வகுப்பினர் வாழும் மாநிலமாகவும் உத்தரகாண்ட் இருக்கிறது. குறிப்பாக, உத்தரகாண்ட்டில், சுமார் 60% பேர் முன்னேறிய பிரிவை சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோரின் வாக்குகள் இயல்பாகவே பா.ஜ.க பக்கம் இருக்கிறது. அதேபோல, பிற்படுத்தப்பட்டோரின் கணிசமான வாக்குகளும் பா.ஜ.க-வுக்கு உண்டு.
காங்கிரஸ் பூசல்
காங்கிரஸ் கோஷ்டி பூசலும் ஒட்டிப்பிறந்த இரட்டை சகோதரர்கள் என்பது நாடறிந்த உண்மை. அதுவே அக்கட்சிக்கு மிகுந்த அவப்பெயரையும், மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையையும் அதிகரித்தது. கைவசம் இருந்த பஞ்சாப் மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தை ஆம் ஆத்மியிடம் பறிகொடுத்த கதைக்குப் பின்னால் இந்த கோஷ்டிப் பூசலும் மிக முக்கியக் காரணமாக இருக்கிறது.
உத்தரகாண்ட் தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கும், உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் தேவேந்திர யாதவுக்கும் இடையேயான பனிப்போர், முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் உத்தரகாண்ட் காங்கிரஸ் தலைவர் கணேஷ் கொடியாலுக்கும், ஹரீஷ் ராவத்துக்கும் இடையே மோதல், காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் கிஷோர் உபாத்யாயா, சரிதா ஆா்யா உள்ளிட்டோர் பா.ஜ.க-வுக்கு தாவியது.
மிக முக்கியமாக தேசிய அளவில் சரிந்து வரும் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு, தொடர்தோல்விகள் போன்றவை மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழக்கச்செய்ததோடு, கட்சிக்குள்ளாக பெரும்பாலானத் தொண்டர்களிடம் அதிருப்தியையும், சோர்வையும் ஏற்படுத்தியது.
இவையெல்லாம், பெரிதாக மெனக்கெடாமலேயே பா.ஜ.க-வுக்கு தானாக சாதகமாக அமைந்தது.
இதுமட்டுமல்லாமல், உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல்முறையாக போட்டியிட்ட ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு இருந்துவந்த சிறுபான்மையினர், முஸ்லீம், பிற்படுத்தப்பட்டோர், தலீத்களின் வாக்குகளை கணிசமாகப் பிரித்ததும், பா.ஜ.க-வின் வெற்றியை சுலபமாக்கியது