இந்த 11 மாவட்டங்களில் வெளிமாநிலத்தவர் நிலம் வாங்க முடியாது - வருகிறது புதிய சட்டம்
11 மாவட்டங்களில் வெளிமாநிலத்தவர்கள் விவசாய நிலம் வாங்க முடியாத சட்டதிருத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
உத்தரகாண்ட்
முன்னதாக நாகாலாந்து, சிக்கிம் போன்ற மாநிலங்களில் வேறு மாநிலத்தவர்கள் நிலம் வாங்க முடியாத வகையில் சட்டம் உள்ளது.
தற்போது உத்தரகாண்ட் மாநிலத்திலும் பிற மாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை விதிக்கும் சட்டதிருத்தத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. நடப்பு நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில் இதை சட்டமாக்க பாஜக அரசு முடிவு செய்துள்ளது.
11 மாவட்டம்
இந்த சட்ட திருத்தத்தின் படி, உத்தரகாண்ட்டில் உள்ள 13 மாவட்டங்களில் ஹரித்வார் மற்றும் உத்தம் சிங் நகர் மாவட்டம் தவிர, மீதமுள்ள 11 மாவட்டங்களில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் நிலம் வாங்க முடியாது.
அதோடு, மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் நிலம் என்ன தேவைக்காக ஒதுக்கப்பட்டுள்ளதோ அந்த தேவைக்கு மட்டுமே அந்த நிலத்தை பயன்படுத்தவேண்டும். மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, அந்த நிலத்தை அரசாங்கம் கைப்பற்றவும் புதிய சட்ட திருத்தத்தில் வகை செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீர்
முன்னதாக 2002-2007 காங்கிரஸ் ஆட்சியிலே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மாநகராட்சி எல்லைக்கு வெளியில், வெளி மாநிலத்தவர்கள், விவசாய நிலம் இல்லாத 500 சதுர மீட்டர் நிலம் வாங்க அனுமதி அளித்தது. அடுத்து வந்த பாஜக அரசு அதனை 250 சதுர மீட்டராக குறைத்தது. 2017 ஆம் ஆண்டு நிலம் வாங்குவதற்கு இருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கிய பாஜக அரசு, தற்போது இந்த புதிய சட்டதிருத்தத்தை அமல்படுத்தியுள்ளது.
முன்னதாக, காஷ்மீரில் வெளி மாநிலத்தவர்கள் நிலம் வாங்க முடியாத வகையில் சட்டம் இருந்தது. 2019 ஆம் ஆண்டு 370 அரசியல் சாசன சிறப்பு பிரிவை நீக்கிய போது நாடு முழுவதும் உள்ளவர்கள் இனிமேல் ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்கலாம் என்று பாஜக அறிவித்தது. தற்போது பாஜக ஆளும் மாநிலத்தில் இந்த சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.