பதவியேற்ற 4 மாதத்தில் ராஜினாமா செய்த உத்தரகாண்ட் முதல்வர்
உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசியல் நெருக்கடி காரணமாக பாஜகவைச் சேர்ந்த முதல்வர் தீரத் சிங் ராவத் பதவியை ராஜினாமா செய்தார்.
உத்தராகண்டில் முதல்வராக இருந்த திரிவேந்திர ராவத், தன் மீது எழுந்த கடுமையான அதிருப்தியை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் கட்சி மேலிடத்தின் உத்தரவை ஏற்று அவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். அவரை தொடர்ந்து மார்ச் மாதத்தில் தீரத் சிங் ராவத் முதல்வராக பதவியேற்றார்.
பதவியேற்றபோது தீரத் சிங், நாடாளுமன்ற எம்.பி.யாக மட்டுமே இருந்ததால், செப்டம்பர் 10 ஆம் தேதிக்குள் உத்தராகண்ட் சட்டப்பேரவை உறுப்பினராக அவர் தேர்வு செய்யப்பட வேண்டுமென்ற விதி அவருக்கு சொல்லப்பட்டது.
ஆனால் கொரோனா நேரத்தில் இடைத்தேர்தலை நடத்துவது மிகவும் சவாலான காரியம் என்பதால் பதவியை ராஜினாமா செய்துக்கொள்வதாக தீரத் சிங் அறிவித்திருக்கிறார்.
அவர் முன்னதாக மூன்று நாள்களுக்கு டெல்லியிலுள்ள பாஜக தலைமை நிர்வாகிகளை சந்தித்து, ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார்.இதில் தீரத் சிங்கை பதவிவிலக பாஜக மேலிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனிடையே ஆளுநர் சந்திப்பு முன்னதாக பாஜக மேலிட தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.