உ.பி. வன்முறையில் 8 பேர் பரிதாப உயிரிழப்பு : மத்திய அமைச்சரின் மகன் மீது போலீசார் கொலை வழக்குப்பதிவு
உத்தரப்பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் சொந்த ஊர், உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கேரிக்கு அருகே உள்ள திக்குனியாகும். இந்நிலையில், நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருந்தார்.
இதனை கேள்விப்பட்டதும் விவசாயிகள் சங்கத்தினர், புதிய வேளாண் சட்டங்களை ரத்துச் செய்யக்கோரி அவருக்கு கருப்புக் கொடி காட்ட ஒன்று திரண்டார்கள். அப்போது மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா துணை முதல்வரை வரவேற்க தனது காரில் சென்றார். அவரது காரையும் விவசாயிகள் வழி மறித்தனர்.
காரை வழிமறித்து விவசாயிகள் கோஷங்கள் எழுப்பி உள்ளனர். அப்போது, அவர்களை இடித்து தள்ளியபடி அங்கிருந்து காரை ஆஷிஷ் மிஸ்ரா எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் இடித்து தள்ளியபடி காரை ஓட்டிச் சென்றதால் விவசாயிகள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஆஷிஷ் மிஸ்ராவின் காரை அடித்து நொறுக்கினார்கள். அதோடு, காரை தீயிட்டு கொளுத்தினார்கள். இச்சம்பவத்தால் லக்கிம்பூரில் கடும் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. இதனையடுத்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்களை கலைத்தனர். அப்போது அது வன்முறையாக வெடித்தது.
இச்சம்பவத்தில் லக்கிம்பூரில் கார் மோதி 4 விவசாயிகளும், தொடர்ந்து நடைபெற்ற வன்முறை மோதலில் 4 பேரும் என மொத்தம் 8 பேர் உயிரிழந்ததாக காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்பட 14 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ரா மகன் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இந்த சம்பவம் நடந்த இடத்தில் தனது மகன் இல்லை என்பதற்கான விடியோ ஆதாரம் இருக்கிறது என்று மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா கூறி இருக்கிறார். இச்சம்பவம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என்று உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உறுதி அளித்திருக்கிறார்.