உ.பியில் தொடரும் கொடூரம்: இரண்டு சிறுமிகள் பலி, ஒருவர் கவலைக்கிடம்
உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் 13 வயது மற்றும் 15 வயமுடைய இரண்டு சிறுமிகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு 17 வயது சிறுமி கவலைக்கிடமான நிலையில் உள்ளார். இவர்கள் மூவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து உன்னாவ் காவல்துறை கூறுகையில், பண்ணையில் இருந்த கால்நடைகளுக்கு உணவளிக்க இந்த மூன்று சிறுமிகளும் சென்றுள்ளனர்.
அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், அவர்கள் கைகள் கட்டப்பட்டு வாயில் நுரைதள்ளிய நிலையில், அவ்வழியாகச் சென்றவர்கள் பார்த்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்களும் சிறுமிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிறுமிகளின் உடலில் எந்தக் காயமும் இல்லை. இது குறித்து விசாரிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிறுமிகளின் உடற்கூராய்வுக்குப் பிறகே உண்மை தெரியவரும் என்று கூறியுள்ளார். கடந்த சில வருடங்களாக உத்திரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சுமத்தி வருகின்றன.
ஏற்கனவே கடந்த ஆண்டு உத்திரப் பிரதேசம் ஹத்ரஸில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தேசத்தை உலுக்கியிருந்தது.

தற்போது மீண்டும் அதே போன்றதொரு கொடூரம் நிகழ்ந்துள்ளது. உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. உ.பியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளது. உ.பி அரசு தலித்துகளுக்கு மட்டுமல்லாது பெண்களுக்கும் எதிராக உள்ளதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நின்று அவர்களுக்கு நீதி கிடைப்பதை காங்கிரஸ் கட்சி உறுதி செய்யும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.