மரணப்படுக்கையில் புதின்...வாழ்நாளை எண்ணிக் கொண்டிருப்பதாக உளவாளி தகவல்

Vladimir Putin Russo-Ukrainian War
By Petchi Avudaiappan May 31, 2022 05:29 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

ரஷ்ய அதிபர் புதின் அதிகபட்சமாக மூன்றாண்டுகள் மட்டுமே உயிர் வாழலாம் என மருத்துவர்கள் கணித்ததாக உளவாளி ஒருவர் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் போர் தொடுத்து வருகிறது. இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுப்பதால் இருதரப்பிலும் ஏராளமான இழப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளது.

பல உலக நாடுகள் போரை நிறுத்தும் படி ரஷ்யாவிடம் கேட்டுக் கொண்டும் அதிபர் புதின் அதனை பொருட்படுத்தவேயில்லை. மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை எதிர்த்தாலும் அந்நாட்டிடம் இருந்து எரிபொருட்களை இறக்குமதி செய்து வருவதால் புதின் தைரியமாக உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறார். 

இதனிடையே புதினின் உடல்நிலை குறித்து பல்வேறு விதமான தகவல்கள் அவ்வப்போது வந்த வண்ணம் உள்ள நிலையில் இதுவரை அரசு தரப்பு எதையும் உறுதி செய்யவில்லை. சமீபத்தில்  அவருக்கு ரத்தப் புற்றுநோய் முற்றிவிட்டதால் அறுவை சிகிச்சை செய்யப்போவதாகவும், அதனால் ஆட்சி அதிகாரங்களை தற்காலிகமாக பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள தனது நம்பிக்கைக்குரிய நிக்கோல் பாத்ருசேவுக்கு வழங்கியிருப்பதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில் புதினின் உடல்நிலை குறித்து புதிய அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இண்டிபெண்டன்ட் இதழில் ரஷ்ய உளவாளி அளித்த தகவலில், ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதாகவும், அவர் அதிகபட்சமாக மூன்றாண்டுகள் மட்டுமே உயிர் வாழலாம் என மருத்துவர்கள் கணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் புதினுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுவதாகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஏதாவது வாசிக்க நேர்ந்தால் அதை மிகப்பெரிய எழுத்துகளாக தாளில் எழுதினாலே அவரால் படிக்க முடிகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே பிரிட்டனில் வாழும் முன்னாள் ரஷ்ய உளவாளி போரிஸ் கார்பிச்கோவ் அதிபர் புதினின் உடல்நிலை சரியில்லை என்பதை உறுதி செய்ததை மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஆனால் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் இதுபோன்ற எந்த ஒரு பிரச்சனையும்அதிபர் புதினுக்கு இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.