பிரச்சாரத்தின்போது சொன்னதை செய்து காட்டிய உதயநிதி ஸ்டாலின்
வெற்றிக்குப்பின் அமைச்சராக மாட்டேன் என உதயநிதி ஸ்டாலின் சொன்னதை செய்து காட்டியதாக அவரது ஆதரவாளர்கள் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.
வெற்றிக்கு பிறகு செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருப்பதால் அமைச்சர் பொறுப்பை ஏற்க மாட்டேன் என்று உதயநிதி ஸ்டாலின் ஏற்கனவே கூறியிருந்த நிலையில், தற்போது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
இந்நிலையில் அவரது அமைச்சரவையின் பெயர் பட்டியல் இன்று வெளியானது. அதில் புதுமுகங்கள் 15 பேருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைச்சராக இருந்த 18 பேருக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.
பிரச்சாரத்தின் போது, அமைச்சர் பொறுப்பு கொடுத்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு, செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கிறது, அமைச்சர் பொறுப்பை மறுப்பேன் என்று கூறியிருந்தார். அதே போல், தற்போது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை.