உக்ரைன் மேயரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய ரஷ்யா - நடந்தது என்ன?
உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மேயர் ஒருவரை ஒருவார காலமாக தங்களது கட்டுப்பாட்டில் வைத்துவிட்டு ரஷ்ய ராணுவம் விடுவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் தொடர்ந்து 23 நாட்களாக இன்றும் போர் நீடித்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களான தலைநகர் கிவ், கார்கிவ், மரியுபோலில் ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவதால் சுமார் 30 லட்சம் உக்ரைன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதனிடையே உக்ரைனின் மெலிட்டோ போல் நகர மேயரான இவான் ஃபேதுரோவை கடந்த வாரம் ரஷ்ய படையினர் கடத்திச் சென்றனர்.இந்த விஷயம் உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் அவரை விடுவிக்க ரஷ்யாவுக்கு உலக நாடுகள் கோரிக்கை விடுத்தன.
உக்ரைன் பிடித்து வைத்துள்ள ரஷ்ய வீரர்களை விடுவித்தால் இவானை விடுவிப்பதாக ரஷ்யா தெரிவிக்க, உக்ரைன் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த 9 இளம் ரஷ்ய வீரர்களை அரசு விடுத்தது. இதனைத் தொடர்ந்து இவான் ஃபேதுரோவை ரஷ்ய ராணுவம் விடுதலை செய்துள்ளது.
இந்நிலையில், உக்ரைன் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட ரஷ்ய வீரர்களை அதிபர் ஜெலன்ஸ்கி குழந்தைகள் என கூறியுள்ளார். இவர்கள் அனைவரும் 2002, 2003 ஆம் ஆண்டுகளில் பிறந்தவர்கள் என்றும், நாங்கள் போர்க்களத்தில் பாதுகாப்பு கேடயமாக பயன்படுத்தப்படுகிறோம் என பிடிபட்ட 2 பேர் தெரிவித்ததாக ஜெலன்ஸ்கி கூறியிருப்பது வைரலாகி வருகிறது.