‘வகுப்பில் செல்போனை யூஸ் பண்ண மாணவன்...’ - கண்டித்த ஆசிரியரை கத்தியால் குத்தி கிழித்த மாணவன்
வகுப்பறைக்கு செல்போன் எடுத்து வந்ததைக் கண்டித்த ஆசிரியரை மாணவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், அமராவதிப் புதூரில் அரசு தொழிற்பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்பயிற்சி மையத்தில் ஜாய்சன் என்ற மாணவன் இயந்திரவியல் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், ஜாய்சன் வகுப்பறைக்குள் செல்போனை ஆசிரியருக்கு தெரியாமல் பயன்படுத்திக் கொண்டிருந்தான். இதைப் பார்த்த ஓவிய ஆசிரியர் ராஜ ஆனந்த் ஜாய்சனை கூப்பிட்டு மற்ற மாணவர்கள் முன்பு கண்டித்துள்ளார். இதனையடுத்து, செல்போனை ஜாய்சனிடமிருந்து பிடுங்கி பயிற்சி மைய முதல்வரிடம் கொடுத்துள்ளார். பயிற்சி மைய முதல்வரும் ஜாய்சனை கண்டித்துள்ளார்.
ஜாய்சனின் பெற்றோரை மையத்திற்கு வரவழைத்து, உங்கள் மகனின் செயல்பாடுகள் மற்ற மாணவர்களையும் கெடுக்கிறது என்று பயிற்சி மையத்திலிருந்து நீக்கியிருக்கிறார். பெற்றோர் முதல்வரிடம் மன்னிப்புக் கேட்டனர். அவர்களின் நிலையை பார்த்த முதல்வர் மன்னித்து ஜாய்சனை மீண்டும் வகுப்பறைக்குள் அனுமதித்துள்ளார்.
மற்ற மாணவர்கள் முன்பு அவமானப்படுத்திய ஜாய்சன் மனஅழுத்தத்தில் இருந்தான். சம்பவத்தன்று வகுப்பறைக்கு வந்த ஜாய்சன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆசிரியர் ராஜ ஆனந்த்தின் உடலில் 5 இடங்களில் சரமாரியாகக் குத்தினான்.
காயமடைந்த ஆசிரியர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். மற்ற ஆசிரியர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் ஜாய்சனை போலீசார் கைது செய்துள்ளனர்.