எச் - 1பி விசா தடை நீட்டிப்பு - டிரம்ப் அதிரடி உத்தரவு
அமெரிக்க அதிபர் டிரம்ப், எச் - 1பி விசாவுக்கான தடையினை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்து, உத்தரவு பிறப்பித்துள்ளார். அமெரிக்க நிறுவனங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்களை பணிக்கு அமர்த்த, எச் - 1பி விசா வழங்கப்படுகிறது.
இந்தியா, சீனாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வல்லுனர்கள், இதன் மூலம் பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, அதிகரித்துள்ள வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை காரணமாக, எச் - 1பி விசா வழங்க தடை விதிக்கப்படுவதாக, கடந்த ஆண்டு டிரம்ப் அறிவித்தார்.
இந்த தடை, நேற்று முன்தினம் முடிவடைய இருந்த நிலையில், அதை மேலும், மூன்று மாதங்களுக்கு நீட்டித்து, டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால்,மார்ச், 31 வரை, எச் - 1பி விசா, நிரந்தர குடியுரிமைக்கான கிரீன் கார்டு போன்றவற்றுக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஜோ பைடன், அதிபரானதும், டிரம்ப் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.