கொரோனா தடுப்பூசி உற்பத்தி: அமெரிக்கா அறிவித்துள்ள முக்கியமான முடிவு

USA India Corona Vaccine
By mohanelango May 06, 2021 10:18 AM GMT
Report

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. கொரோனாவுக்கு எதிரான ஒரே ஆயுதமாக தடுப்பூசி மட்டுமே தற்போது உள்ளன.

சர்வதேச அளவில் பத்துக்கும் மேற்படட் தடுப்பூசிகள் பரவலாக பயன்பாட்டில் இருந்து வருகின்றன. ஆனால் உலக நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதில் பாரபட்சம் நிலவுகிறது.

மேற்குலக நாடுகள் தங்களுடைய தேவைக்கும் அதிகமாக கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்து வைத்துள்ளன. தங்களுடைய மக்களுக்கு மின்னல் வேகத்தில் தடுப்பூசிகளை செலுத்தி வருகின்றன.

ஆனால் பின் தங்கிய நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி கிடைப்பதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது.

கொரோனா பேரிடர் தொடங்கிய காலத்திலிருந்தே இந்த ஏற்றத்தாழ்வுகள் எழும் என எச்சரிக்கப்பட்டு வந்தது. அனைத்து நாடுகளுக்கும் சரிசமமாக தடுப்பூசிகளை வழங்க ஐ.நா முன்னெடுத்த கோவேக்ஸ் திட்டமும் தொய்வுடனே செயல்பட்டு வருகிறது.

இந்த சிக்கல்களுக்குத் தீர்வு காண மேற்குலக நாடுகள் கொரோனா தடுப்பூசி தயாரிப்பு பொருட்கள் மீது வைத்துள்ள அறிவுசார் சொத்துரிமையை (Intellectual Property Rights) தற்காலிகமாக விட்டுத்தர வேண்டும் என வளர்கின்ற மூன்றாம் உலக நாடுகள் உலக வர்த்தக நிறுவனத்தை வலியுறுத்தின. 

ஆனால் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் இதற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்தன. மேற்குலக நாடுகள் இந்த உரிமையை தற்காலிகமாக தளர்த்தினால் மற்ற நாடுகளிலும் தடுப்பூசிகளின் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

இந்தியா, பிரேசில், சீனா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து இந்த கோரிக்கையை முன்வைத்து வந்தன. தற்போது அமெரிக்கா இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியமும் இதற்கு இசைவு தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.