மருத்துவ ரீதியாக இறந்த பெண் - மீண்டும் உயிர் பிழைத்த அதிசயம்
அமெரிக்காவில் மருத்துவ ரீதியாக மரணமடைந்த பெண் 45 நிமிடம் கழித்து மீண்டும் உயிர் பிழைத்த அதிசயம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த கேத்தி பேத்தன் என்ற பெண் வசித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு கோல்ஃப் கிரவுண்டில் விளையாடிக்கொண்டிருந்த போது இவரது செல்போனிற்கு அவரது மகள் ஸ்டேக்கி போன் செய்தார்.
நிறைமாத கர்ப்பிணியான ஸ்டேக்கி தனக்கு பிரசவ வலி வந்து விட்டதாக கூற பதறிப்போன கேத்தி உடனடியாக வீட்டிற்குச் சென்று தன் மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். ஸ்டேக்கியின் நிலையை கண்டு பதற்றத்திலிருந்த கேத்திக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
இதனையடுத்து அவரும் அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கேத்தியை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவருக்கு இதய துடிப்பு, பல்ஸ், மூளைக்கு ரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜன் சப்ளை ஆகியவை நின்றுவிட்டது. இப்படி ஒருவருக்கு நடந்தால் அவர் மருத்துவ ரீதியாக உயிரிழந்துவிட்டதாக அர்த்தம்.
அதன்பின் நோயாளிக்கு சிபிஆர் முறை சிகிச்சை அளிக்கப்படும். அப்படி அளிக்கப்பட்டாலும் அதில் உயிர் பிழைப்பது மிகவும் கடினம் என்ற போதிலும் கேத்திக்கு அந்த சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டது. அதேநேரத்தில் மகள் ஸ்டேக்கி பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இறந்ததாக கருதப்பட்ட கேத்தி 45 நிமிடங்கள் கழித்து சுயநினைவுக்கு வந்தார். இந்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.