அமெரிக்காவில் திடீர் அவசரநிலை அறிவிப்பு; 6 கோடி பேர் பாதிப்பு - என்ன காரணம்?
அமெரிக்காவில் 6 மாகாணங்களில் எமர்ஜென்சி நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவு
அமெரிக்கா, பல்வேறு மாகாணங்களில் சமீப காலமாக வெப்பநிலை குறைந்துள்ளது. அதீத காற்று வீசும் நிலையில், பனிப்பொழிவும் இருந்து வருகிறது. இதன்மூலம், அந்நாடு மோசமான நிலையை எதிர்கொண்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பனிப்பொழிவு மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக, கன்சாஸ், மேற்கு நெப்ராஸ்கா மற்றும் இந்தியானா ஆகிய மாகாணங்களில் நிலைமை கடும் மோசமாக உள்ளது. அங்குள்ள சாலைகளை பனிக்கட்டிகள் முழுமையாக மூடியுள்ளது.
எமர்ஜென்சி நிலை
இதனால், வாகனங்களை இயக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. சில மணி நேரத்தில் பல நூறு கார் விபத்துகள் பதிவாகியுள்ளன. ரயில் மற்றும் விமானச் சேவையும் முடங்கியுள்ளது. சுமார் 200+ விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல இடங்களில் 20 செமீ மேல் பனிக்கட்டிகள் இருக்கும் நிலையில், 72 கிமீ வேகத்தில் பனிப்புயலும் வீசுகிறது.
எனவே, மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியாகவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அங்குள்ள 7 மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. கடும் குளிரைக் கருத்தில் கொண்டு அங்கு இந்தியானா, மேரிலாந்து, வர்ஜீனியா மற்றும் கென்டக்கி மாகாணங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 6.3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அடுத்த சில நாட்கள் வரை இந்த வானிலை தொடரும். அதற்கு ஏற்றவாறு தேவையான முன்னெச்சரிக்கை பணிகளை எடுக்குமாறு வானிலை மையம் எச்சரித்துள்ளது.