முடிவுக்கு வராத யுத்தம் : உக்ரைன் தாக்குதலுக்காக சீனாவிடம் ராணுவ உதவி கேட்கும் ரஷ்யா

russia china uswarn
By Irumporai Mar 14, 2022 05:42 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

 உக்ரேனில் போரை நடத்துவதற்காக சீனாவிடம் ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை ரஷ்யா கேட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கத்திய ஊடகங்கள் சிலவற்றில் வந்த செய்தியின்படி உக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கியதில் இருந்து சீனாவிடன் ரஷ்யா ஆயுதங்கள் கொடுத்து உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளியானது.

இதை சில அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும் ரஷ்யா எந்த வகையான ராணுவத் தளவாடங்களை சீனாவிடம் கேட்கிறது என்பதைக் குறிப்பிட அதிகாரிகள் மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

பொருளாதாரத் தடைகளின் தீவிரத்தைத் தணிக்கும் வகையில் பொருளாதார ரீதியிலான உதவிகளை சீனாவிடம் ரஷ்யா கோரியிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. ரஷ்யா - யுக்ரேன் மோதலில் சீனா இதுவரை தன்னை நடுநிலை வகிப்பதாக காட்டுவதற்கே முற்பட்டிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை மற்றும் பொது அவையில் நடுநிலை வகித்தது. ரஷ்யாவின் படையெடுப்பை இதுவரை வெளிப்படையாகக் கண்டிக்கவில்லை.

இந்த நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவன் ரோமில் சீன வெளியுறவுக் கொள்கை அதிகாரி யாங் ஜீச்சியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை சர்வதேச ஊடகத்தில் பேசிய சல்லிவன், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகளால் ஏற்படும் சிக்கல்களை "சீனா அல்லது வேறு யாரும் ஈடுசெய்ய முடியாது என்பதை அமெரிக்கா உறுதி செய்யும்" என்று கூறினார்.

இது தொடர்பாக வாஷிங்டனில் உள்ள சீனத் தூதரகத்திடம் கேட்டபோது, யுக்ரேனில் நடைபெறும் போர் கட்டுப்பாடு இல்லாமல் போவதைத் தடுப்பதே சீனாவின் நோக்கம் என்று தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

"யுக்ரேனின் நிலைமை உண்மையில் அதிருப்தி அளிக்கிறது" என்று தூதரக செய்தித் தொடர்பாளர் லியு பெங்யு கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. "இப்போது பதற்றமான சூழ்நிலையை அதிகரிப்பதையோ அல்லது கட்டுப்பாட்டை மீறுவதையோ தடுப்பதற்கே முன்னுரிமை அளிக்கிறோம்" என்று அவர் கூறினார்.

மேலும் சீனாவிடம் ரஷ்யா உதவி கேட்டதைப்பற்றி கேள்வி படவே இல்லை என சீன தூதரகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனிடையே ரஷ்யாவின் பொருளாதாரத் தடைகளை மீற சீனா நடவடிக்கை எடுத்தால் பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

முடிவுக்கு வராத யுத்தம் : உக்ரைன் தாக்குதலுக்காக  சீனாவிடம் ராணுவ உதவி கேட்கும் ரஷ்யா | Us Warns China Against Helping Russia

சீனாவிடம் ரஷ்யா ராணுவ உதவி கேட்பதாக வெளியாகியிருக்கும் தகவல்களை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது. சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் ஒரு நடவடிக்கையாக இது கவனிக்கப்படுகிறது.

யுக்ரேனுக்கு பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆயுதம் வழங்குவதை சீனா கண்டித்திருக்கிறது. இந்த நேரத்தில் ரஷ்யாவுக்கு சீனா ஆயுதம் வழங்க முன்வந்தால் அது நிலைமையை மோசமாக்கும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகிறார்கள்.

போலந்தின் எல்லையை ஒட்டிய நகரில் ரஷ்யா தாக்குதல் நடத்தியிருப்பதால் நேட்டோ நாடுகள் கவலையடைந்திருக்கின்றன. யுக்ரேனைத் தாண்டி போர் நடப்பதற்கோ, நேட்டோ நாடுகளுடன் ரஷ்யா நேரடியாக மோதுவதற்கு இது காரணமாக அமைந்துவிடும் என்றும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது.