3 தடுப்பூசிகள் போட்ட துணை அதிபர் கமலா ஹாரிஸூக்கு கொரோனா உறுதி
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக அளவில் கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதால் அங்கு கொரோனா வைரஸ் பரவலானது கட்டுக்குள் வந்தது.
இதனிடையே அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று தொடர்பாக அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை. கமலா ஹாரிஸ் தற்போது நலமுடன் உள்ளார் என்றும், அவர் தனிமைப்படுத்தப்பட்டு துணை அதிபர் இல்லத்தில் இருந்து தொடர்ந்து பணியாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கமலா ஹாரிஸ் கொரோனா வழிகாட்டுதல்கள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைக்கு பின்பு சோதனையில் நெகட்டிவ் என முடிவு வந்த பின்னர் வெள்ளை மாளிகைக்கு திரும்புவார் எனவும் கூறப்பட்டுள்ளது.