இந்தியாவின் கோவேக்சினுக்கு அவசர அனுமதி மறுத்த அமெரிக்கா
உலகம் முழுவதும் கொரோனா பரவல் வீரியம் குறையாமல் இருந்து வருகிறது. அதே சமயம் தடுப்பூசி செலுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
உலகம் முழுவதும் பல்வேறு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இந்தியாவில் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் ஆகியவை தயாரிக்கப்படுகின்றன.
இதில் கோவேக்சின் இந்தியாவிலே தயாரிக்கப்பட்ட தடுப்பூசி. ஆனால் கோவேக்சினுக்கு உலக சுகாதார நிறுவனம் தற்போது வரை ஒப்புதல் வழங்கவில்லை. இதனால் கோவேக்சின் எடுத்துக் கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டவர்களுக்கு மட்டுமே பயணம் செய்ய பல்வேறு வெளி நாடுகள் அனுமதி வழங்குகின்றன.

பாரத் பயோடெக் நிறுவனம் கோவேக்சின் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகளை இன்றுவரை வெளியிடவில்லை. உலக சுகாதார நிறுவனமும் போதிய ஆவணங்களை தரவில்லை எனக் கூறி அனுமதியை நிராகரித்துள்ளது.
இந்த நிலையில் தற்போது அமெரிக்காவின் உணவு மற்றும் மருத்து தரக் கட்டுப்பாடு நிறுவனம் கோவேக்சினுக்கு அவசர அனுமதி மறுத்துள்ளது.
அவசர அனுமதிக்கான விண்ணப்பத்தை பரிசீலிக்க முடியாது என்றும் வழக்கமான விண்ணப்பத்தின் கீழ் உரிய ஆவணங்களுடன் அனுமதிக்கு மனு செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது.
இதனால் கோவேக்சின் தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.