ஏலத்தில் புதிய சாதனை : 30 டாலருக்கு வாங்கிய ஓவியம்... ரூ.13 கோடிக்கு விற்பனை!

United States of America World
By Vinoja Oct 07, 2026 05:32 AM GMT
Report

அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தில் பழைய எஸ்டேட் விற்பனையில் வெறும் 30 டாலருக்கு வாங்கப்பட்ட ஒரு பழைய ஓவியம், சர்வதேச ஏலத்தில் 1.35 மில்லியன் டாலருக்கு, அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.13 கோடிக்கு விற்பனையாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மிஷிகன் மாநிலத்தின் கலாமசூ நகரைச் சேர்ந்த கலைப்பொருட்கள் சேகரிப்பாளர் ஒருவர், பழைய மியூசிக் ரெக்கார்டுகளைத் தேடி எஸ்டேட் விற்பனைக்குச் சென்றிருந்தார். அப்போது தூசி படிந்து கிடந்த சிறிய ஓவியம் ஒன்று அவரது கவனத்தை ஈர்த்தது.

ஏலத்தில் புதிய சாதனை : 30 டாலருக்கு வாங்கிய ஓவியம்... ரூ.13 கோடிக்கு விற்பனை! | Us Man Pays 2800 For Old Painting Sells 13 Crore

ஓவியத்தின் பின்புறத்தில் “அபெர்கிராம்பி” என்ற பெயர் எழுதப்பட்டிருந்ததைப் பார்த்த அவர், அதிகம் யோசிக்காமல் அதை வெறும் 30 டாலருக்கு வாங்கினார்.

70 ஆண்டுகளாக மறைந்திருந்த ஓவியம்

பின்னர் அந்த ஓவியத்தை நிபுணர்களிடம் ஆய்வு செய்தபோதுதான் அதன் உண்மையான மதிப்பு தெரியவந்தது. இது சிகாகோவைச் சேர்ந்த புகழ்பெற்ற சர்ரியலிச ஓவியரான கெர்ட்ரூட் அபெர்கிராம்பி 1951-ஆம் ஆண்டு வரைந்த Alderman Merriam’s Shells என்ற அசல் ஓவியம் என்பது உறுதி செய்யப்பட்டது.

1952-ஆம் ஆண்டு, மருத்துவ சிகிச்சைக்கான கட்டணமாக இந்த ஓவியத்தை டாக்டர் ஜான் ரெனால்ட்ஸுக்கு அபெர்கிராம்பி வழங்கியிருந்தார். அதன் பின்னர் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஓவியம் பொதுமக்களின் பார்வைக்கு வராமல் மறைந்திருந்தது.

ஏலத்தில் புதிய சாதனை : 30 டாலருக்கு வாங்கிய ஓவியம்... ரூ.13 கோடிக்கு விற்பனை! | Us Man Pays 2800 For Old Painting Sells 13 Crore

ஏலத்தில் தலைகீழான கணிப்பு

நியூயார்க்கைச் சேர்ந்த பிரபல ஏல நிறுவனமான Freeman’s மூலம் கடந்த 1-ஆம் தேதி இந்த ஓவியம் ஏலத்திற்கு வந்தது. ஆரம்பத்தில் இதன் விலை அதிகபட்சம் 30,000 டாலர் வரை செல்லலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஏலம் தொடங்கியதும் நிலைமை முற்றிலும் மாறியது. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கலை ஆர்வலர்கள் ஆன்லைன் மற்றும் தொலைபேசி மூலம் போட்டிப்போட்டு ஏலம் கேட்டதால், ஓவியத்தின் விலை வேகமாக உயர்ந்தது.

இறுதியில், அனைவரின் கணிப்புகளையும் முறியடித்து 1.35 மில்லியன் டாலருக்கு, அதாவது சுமார் ரூ.13 கோடிக்கு ஓவியம் விற்பனையானது. இதன் மூலம் கெர்ட்ரூட் அபெர்கிராம்பியின் படைப்புகளில் அதிக விலைக்கு விற்பனையான ஓவியம் என்ற புதிய சாதனையையும் இது படைத்துள்ளது.

வெறும் 30 டாலருக்கு வாங்கப்பட்ட ஒரு பழைய ஓவியம், ரூ.13 கோடிக்கு விற்பனையான இந்த சம்பவம், கலை உலகில் எதிர்பாராத விதமாக கிடைத்த ஒரு புதையலாகவே பார்க்கப்படுகிறது.